விவிலியத் தேடல் விவிலியத் தேடல்  

விவிலியத் தேடல்

நன்றியுள்ள இதயம் இறைவனின் பேரன்பை உணரச் செய்கிறது; உண்மையும் நீதியும் அந்த அன்பை உலகிற்கு வெளிப்படுத்துகிறது.

திருப்பாடல் 89 – ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்.

அருள்பணி. ரிச்சர்டு, SDB

அன்பிற்கினியவர்களே,

இன்று நாம் சிந்திக்கவிருப்பது திருப்பாடல் 89. இந்தத் திருப்பாடல், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னருக்கு இறையருளும் ஆசீர்வாதமும் வழங்கப்படுவதை எடுத்துரைக்கிறது. அதே நேரத்தில், இறைவனின் நீதியும் நேர்மையும் அவரது ஆட்சியின் அடித்தளங்களாக இருப்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. திருப்பாடலாசிரியர் " ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன் " என்று  கூறுகிறார்: இந்த வார்த்தைகள் நம் வாழ்க்கைக்கான ஓர் அழைப்பாக அமைகின்றன. நம் வாழ்வில் ஆண்டவர் எண்ணற்ற நன்மைகளைச் செய்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் அவர் நம்மை வழிநடத்தி, பாதுகாத்து, ஆசீர்வதித்து வருகிறார். எனவே, முதலில் நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய மனப்பான்மை நன்றியுணர்வு. நான் என் வாழ்க்கையில் ஆண்டவர் செய்த நன்மைகளுக்காக உண்மையாக நன்றி செலுத்துகிறேனா? அவர் தந்த அருட்கொடைகளை உணர்ந்து வாழ்கிறேனா? நன்றியுள்ள இதயம்தான் இறைவனின் பேரன்பை உணரவும், அதை மற்றவர்களிடம் எடுத்துச் செல்லவும் முடியும்.

அடுத்ததாக இந்தத் திருப்பாடல் நீதியையும் நேர்மையையும் வலியுறுத்துகிறது. நாம் கிறிஸ்துவின் மதிப்பீடுகளின்படி வாழும்போது, நம் வாழ்க்கையே பிறருக்கு ஒரு சாட்சியாக மாறுகிறது. புனித பவுல் எபேசியர் 6:14-ல் கூறுகிறார்:

"உண்மையை இடைக்கச்சையாகவும், நீதியை மார்புக்கவசமாகவும் அணிந்துகொண்டு நில்லுங்கள்."

உண்மையும் நீதியும் நம் வாழ்க்கையின் பாதுகாப்புக் கவசமாக இருக்கும்போது, எந்தச் சவாலையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும். நம் வாழ்வின் வழியாக கிறிஸ்துவை மற்றவர்கள் காண முடியும்.

எனவே, இன்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்:

  • ஆண்டவர் செய்த நன்மைகளுக்காக நான் நன்றி நிறைந்தவராக இருக்கிறேனா?
  • என் வாழ்க்கையில் உண்மையையும் நீதியையும் கடைப்பிடிக்கிறேனா?
  • என் வாழ்வின் மூலம் கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்கு பிரதிபலிக்கிறேனா?

நாம் நன்றியுடனும், நீதியுடனும், உண்மையுடனும் வாழும்போது, நாமும் திருப்பாடலாசிரியரைப் போல, " ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன் " என்று வாழ்வால் சாட்சி சொல்ல முடியும். அதன் வழியாக இறைவனின் மகிமை உலகில் மேலும் வெளிப்படும்; நாமும் உண்மையான நற்செய்தியாளர்களாக மாறுவோம்.

ஜெபம்

அன்பு ஆண்டவரே, எங்கள் வாழ்வு அனைத்தும் உமது அருட்கொடையே. எங்கள் வாழ்க்கையின் வழியாக உமது பேரன்பை மற்றவர்களுக்கு பிரதிபலிக்க அருள் தாரும். எப்போதும் நன்றி நிறைந்த இதயத்துடன் வாழவும், உண்மையையும் நீதியையும் கடைப்பிடிக்கும் கிறிஸ்தவர்களாக இருக்கவும் எங்களுக்கு வரம் தாரும். எங்கள் வாழ்வு உமக்கே மகிமையாகவும், பிறருக்கு ஆசீர்வாதமாகவும் அமையச் செய்தருளும். ஆமென்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

14 ஜூலை 2026, 12:45