போர்கோ லவுதாத்தோ சி' போர்கோ லவுதாத்தோ சி'  

வத்திக்கானில் செயற்கை நுண்ணறிவு மற்றும் அணு ஆயுதங்கள் குறித்த உலக நோபல் அறிஞர்கள் பேரவை!

செயற்கை நுண்ணறிவு மற்றும் அணு ஆயுதங்களின் அறநெறிசார் சவால்களை ஆராயும் உலக நோபல் அறிஞர்கள் பேரவை, ஜூலை 14 முதல் 16 வரை வத்திக்கானின் காஸ்தல் கந்தோல்போவில் நடைபெறுகிறது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூலை 14 முதல் 16 வரை, காஸ்தல் கந்தோல்போவிலுள்ள போர்கோ லவுதாத்தோ சி' வளாகத்தில், செயற்கை நுண்ணறிவு மற்றும் அணு ஆயுதங்கள் குறித்த உலக நோபல் அறிஞர்கள் பேரவையை வத்திக்கான் நடத்தி வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நோபல் பரிசு பெற்றோர், உலகத் தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள், முன்னாள் அரசுத் தலைவர்கள் மற்றும் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் மகத்தான மானுடம் (Magnifica humanitas) திருமடலை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்தப் பேரவை, செயற்கை நுண்ணறிவு, அணு ஆயுதங்கள் மற்றும் உலகப் பாதுகாப்பு தொடர்பான அறநெறிசார் சவால்களை ஆராய்கிறது. இது திருத்தந்தையின் "ஆயுதமற்ற மற்றும் ஆயுதங்களை அகற்றும் அமைதி" என்ற பார்வையை முன்னிறுத்துகிறது.

OpenAI, Google DeepMind, Anthropic உள்ளிட்ட நிறுவனங்களின் நிபுணர்களும், ஹார்வர்டு, ஸ்டான்போர்டு, ஆக்ஸ்போர்டு, பிரின்ஸ்டன், சிங்ஹுவா போன்ற பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளும் அனைத்துலக பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு ஆளுமை, அணு ஆயுத ஒழிப்பு மற்றும் அமைதியை மையமாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி குறித்து கலந்துரையாடுகின்றனர்.

இப்பேரவை, "செயற்கை நுண்ணறிவு, அணு மற்றும் தன்னாட்சி ஆயுதங்களின் காலத்தில் ஆயுதமற்ற மற்றும் ஆயுதங்களை அகற்றும் அமைதிக்கான உரோம் அறிவிப்பு" வெளியிடப்படுவதுடன் ஜூலை 16ஆம் நாள் நிறைவடையும்.

இந்த அறிவிப்பு, செயற்கை நுண்ணறிவின் பொறுப்புமிக்க பயன்பாட்டிற்கான உலகளாவிய அறநெறி நெறிமுறைகளை முன்வைப்பதோடு, மனித மாண்பு, பொறுப்புணர்வுமிக்க புதுமை, அனைத்துலக ஒத்துழைப்பு, முழுமையான மனித முன்னேற்றம் மற்றும் நிலையான அமைதி ஆகியவற்றை வலியுறுத்தும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

14 ஜூலை 2026, 12:23