தாய்பேவின் கிறிஸ்தவ இருப்பைப் பாதுகாக்க வேண்டுகோள் விடுக்கும் கர்தினால் பித்சபாலா
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
புனித பூமி முழுவதிலும் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள திருஅவை தன்னால் இயன்ற அனைத்தையும் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று தாய்பே மக்களுக்கு கர்தினால் பித்சபாலா அவர்கள் உறுதியளித்துள்ளார்.
பாலஸ்தீனத்தில் எஞ்சியுள்ள ஒரே கிறிஸ்தவ கிராமமான தாய்பேவுக்கு, தூய கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா நாளன்று மேற்கொண்ட பயணத்தின்போது, எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பித்சபாலா அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலக மீட்பர் இலத்தீன் வழிபாட்டுமுறை ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியின்போது, அதிகரித்து வரும் கட்டுப்பாடுகள் மற்றும் நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டு வரும் கிறிஸ்தவ சமூகத்திற்கு அவர் தனது ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் வெளிப்படுத்தினார்.
அப்போது, கடினமான சூழ்நிலைகள் நிலவும் போதிலும், இறை நம்பிக்கையிலும் எதிர் நோக்கிலும் உறுதியாக நிலைத்திருக்குமாறு அங்கு வாழும் மக்களை கர்தினால் ஊக்கப்படுத்தினார்.
"அச்சம் அல்லது நம்பிக்கையற்ற நிலை ஆகியவற்றுக்கு அடிபணிய வேண்டாம்" என்று மக்களை வலியுறுத்திய அவர், அவர்களின் வாழும் உரிமையையும் தங்கள் தாயகத்திலேயே நிலைத்திருக்கும் உரிமையையும் சுட்டிக்காட்டியதுடன், "துணிவுடன் இருங்கள். அச்சம் கொள்ள வேண்டாம்," என்றும் கூறினார்.
திருப்பயணிகள், பார்வையாளர்கள், ஊடகவியலாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வெளிநாட்டினர் தாய்பேவுக்குச் செல்வது தொடர்பில் கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், தாய்பே மற்றும் ரிமோன் பகுதிகளை மூடப்பட்ட இராணுவ மண்டலமாக அறிவித்த இஸ்ரேலின் உத்தரவுக்கு மத்தியில் கர்தினாலின் இந்தப் பயணம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
தாய்பேவின் சான்று வாழ்வு அந்தக் கிராமத்தைத் தாண்டியும் நீடிக்கிறது என்பதை வலியுறுத்திய கர்தினால் அவர்கள் "மிகவும் சிக்கலான இந்த சூழ்நிலைக்கு மத்தியில் நாம் தொடர்ந்து கிறிஸ்தவக் குரலாக இருக்க உங்களின் முன்மாதிரி முக்கியமானது," என்றும் அவர் கூறினார்.
இந்தப் பயணத்தின் மூலம் தாய்பேவை ஆதரிப்பதற்கும் புனித பூமி முழுவதும் கிறிஸ்தவ இருப்பைப் பாதுகாப்பதற்குமான திருஅவையின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.