“செயற்கை நுண்ணறிவும் கத்தோலிக்க திருச்சபையும்” நூலின் அட்டைப்படம். “செயற்கை நுண்ணறிவும் கத்தோலிக்க திருச்சபையும்” நூலின் அட்டைப்படம்.  (©Cover of Artificial Intelligence )

AI வளர்ச்சியில் ஞானமும் அறநெறியும் அவசியம்: பிலிப்பைன்ஸ் இறையியலாளர்கள்

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தொமினிக்கன் இறையியலாளர்களான லியோ-மார்ட்டின் ஆஞ்சலோ R. ஓகாம்போ, OP, மற்றும் இவான் எஃப்ரெய்ம் A. கோஸம், OP ஆகியோர் தங்களது புதிய நூலில், செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சிக்கு கத்தோலிக்கத் திருஅவை பொறுப்புடனும் விவேகத்துடனும் பதிலளிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கின்றனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தொமினிக்கன் சபை இறையியலாளர்களான லியோ-மார்ட்டின் ஆஞ்சலோ R. ஓகாம்போ, OP, மற்றும் இவான் எஃப்ரெய்ம் A. கோஸம், OP ஆகியோர், தங்களது புதிய நூலான “செயற்கை நுண்ணறிவும் கத்தோலிக்கத் திருஅவையும்: எண்ணிம யுகத்தின் சவால்கள், விவேகம் மற்றும் நம்பிக்கை” (Artificial Intelligence and the Catholic Church: Challenges, Discernment and Hope in a Digital Age) மூலம், செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சிக்கு கத்தோலிக்கத் திருஅவை எவ்வாறு பொறுப்புடனும் விவேகத்துடனும் பதிலளிக்க வேண்டும் என்று ஆராய்கின்றனர்.

அமல மரியின் போதக சபையைச் சேர்ந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் அறநெறி, இறையியல் மற்றும் மேய்ப்புப்பணி சார்ந்த சவால்களையும், வேலை, கல்வி, தகவல் தொடர்பு, நிர்வாகம் மற்றும் மனித உறவுகளில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆராய்கிறது.

செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமல்ல, மனித மாண்பு, சுதந்திரம், பொறுப்புணர்வு மற்றும் பொது நன்மைகள் பற்றிய அடிப்படை கேள்விகளை எழுப்பும் ஒரு விடயம் என்று அந்த நூலின் ஆசிரியர்கள் வாதிடுகின்றனர். மேலும் மறைக்கல்வி, மேய்ப்புப்பணி, நற்செய்தி அறிவிப்பு மற்றும் இறையியல் சிந்தனை ஆகியவற்றில் இதன் தாக்கங்களையும் அவர்கள் பரிசீலிக்கின்றனர்.

பெருகிவரும் புதிய தொழில்நுட்பங்களுக்கு பதிலளிப்பதில் ஞானத்துடனும் பகிர்ந்துகொள்ளப்பட்ட விவேகத்துடனும் செயல்பட வேண்டும் என்ற திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் “மகத்தான மானுடம்” (Magnifica Humanitas) எனும் திருத்தூது மடலின் கருத்துகளை இவர்களின் அணுகுமுறையும் பிரதிபலிக்கிறது.

தொழில்நுட்பத்தின் மீது சிந்தனையற்ற ஆர்வத்தையோ ஆதாரமற்ற அச்சத்தையோ தவிர்த்து, மனித மாண்பு, படைப்பைப் பாதுகாத்தல், அமைதி மற்றும் ஏழைகள் மீதான அக்கறை ஆகியவற்றை மையமாகக் கொண்டு புதிய தொழில்நுட்பங்களை அணுக வேண்டும் என திருத்தந்தை வலியுறுத்துகிறார்.

மணிலா பேராயர் கர்தினால் ஜோஸ் F. அட்வின்குலா அவர்கள் இந்நூலைப் பாராட்டியதுடன், செயற்கை நுண்ணறிவின் சவால்களைத் திருஅவை “ஞானம், அறநெறித் தெளிவு மற்றும் நற்செய்தி நம்பிக்கையுடன்” எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இறுதியாக தொழில்நுட்பம் மற்றும் மனிதகுலம் குறித்த உலகளாவிய விவாதத்தில் பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கக் கண்ணோட்டத்தைச் சேர்த்து, செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கும், உறவுகளுக்கும், பொது நன்மைக்கும் சேவையாற்றுவதாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

28 ஆகஸ்ட் 2026, 14:54