2026.08.08 Assisi

முதல் ஆசிய பிரான்சிஸ்கன் மறைப்பணியாளர் மாநாடு!

சென்னையில் “புனித அசிசியின் பிரான்சிஸுடன் இணைந்து இன்றைய ஆசியாவில் கிறிஸ்துவை அறிவிப்போம்” என்ற கருப்பொருளில் முதல் ஆசிய பிரான்சிஸ்கன் மறைப்பணியாளர் மாநாடு நடைபெற்றது.

“புனித அசிசியின் பிரான்சிஸுடன் இணைந்து இன்றைய ஆசியாவில் கிறிஸ்துவை அறிவிப்போம்” என்ற கருப்பொருளில், சென்னையில் முதல் ஆசிய பிரான்சிஸ்கன் மறைப்பணியாளர் மாநாடு நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள், கர்தினால்கள், துறவியர், பொதுநிலை பிரான்சிஸ்கன்கள் மற்றும் மறைப்பணியாளர்கள் இதில் பங்கேற்று, ஆசியாவில் நற்செய்தி அறிவிப்பதற்கான புதிய வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினர்.

“புனித அசிசியின் பிரான்சிஸுடன் இணைந்து இன்றைய ஆசியாவில் கிறிஸ்துவை அறிவிப்போம்”

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், சென்னையில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் (எளிய பிரான்சிஸ்கன் சகோதரர்கள் -OFM) இந்தியா மற்றும் ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரான்சிஸ்கன் குடும்பத்தினரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றுகூடல் கடந்த வார இறுதியில் நடைபெற்றது.

புனித அசிசியின் பிரான்சிஸுடன் இணைந்து இன்றைய ஆசியாவில் கிறிஸ்துவை அறிவிப்போம்" எனும் கருப்பொருளில் நடைபெற்ற இக்கருத்தரங்கம் ஆயர்கள், கர்தினால்கள், துறவியர், பொதுநிலை பிரான்சிஸ்கன்கள் மற்றும் திருத்தந்தையின் மறைப்பணி அமைப்புகளோடு (Pontifical Missionary Organizations - PMO)  தொடர்புடைய மறைமாவட்ட குருக்கள் பலரையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்தது. சிந்தனை, கலந்துரையாடல் மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்வு, ஆசியாவில் மறைப்பணிக்கான புதிய வழிமுறைகளை ஆராயும் முக்கிய களமாக அமைந்தது.

இம்மாநாடானது திருத்தந்தையின் மறைப்பணியாளர் ஒன்றியம் முன்னெடுக்கும் 'ஆசிய பிரான்சிஸ்கன் மறைப்பணி' (AFM)'ஆசிய இறையியல் ஆய்வுகளுக்கான பிரான்சிஸ்கன் நிறுவனம்' (FIATS)  மற்றும் OFM -இந்தியா வெளியிடும் சர்வதேச பிரான்சிஸ்கன் காலாண்டு இதழான 'TAU' ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெற்றது.

2026ஆம் ஆண்டு யூபிலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்த இம்மாநாடு, பின்வரும் நான்கு முக்கிய வரலாற்று நிகழ்வுகளையும் சிறப்பித்தது:

•             புனித அசிசியின் பிரான்சிஸ் அவர்களின் விண்ணகப் பிறப்பின் (Transitus) 800-

      ஆம் ஆண்டு நிறைவு

•             100ஆவது உலக மறைப்பணி ஞாயிறு

•             திருத்தந்தையின் மறைப்பணியாளர் ஒன்றியத்தின் 110ஆம் ஆண்டு நிறைவு

•                 TAU இதழின் 50ஆம் ஆண்டு பொன்விழா

2026 ஆகஸ்ட் 1, சனிக்கிழமை நடைபெற்ற தொடக்க அமர்வில், வேலூர் மறைமாவட்ட ஆயரும், இந்திய திருத்தந்தையின் மறைப்பணித் திருப்பணிகள் அமைப்பின் தேசிய இயக்குநருமான மேதகு ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் சிறப்புரையாற்றினார்.

"புனித அசிசியின் பிரான்சிஸுடன் இணைந்து இன்றைய ஆசியாவில் கிறிஸ்துவை அறிவித்தல்: Missio ad Gentes லிருந்து Missio inter Gentes வரை" எனும் தலைப்பில் அவர் ஆற்றிய உரை, ஆசியச் சூழலில் மறைப்பணியின் புதிய அணுகுமுறைகளைத் தெளிவாக எடுத்துரைத்தது.

ஆசியாவில் நற்செய்தி அறிவித்தல்" என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வை சகோதரர் அல்போன்ஸ் வழப்பனாடி (OFMConv) வழிநடத்தினார். இதில் மங்கோலியாவின் கர்தினால் ஜியோர்ஜியோ மரெங்கோ (IMC) ஒலிச்செய்தி வழியாகவும், இந்தோனேசிய பேராயர் பவுலுஸ் புடி க்லேடன் (SVD)> லாவோஸ்-கம்போடிய தேசிய இயக்குநர் அருட்பணி பவுல் சாட்சிரேய், பஹ்ரைன் மறைப்பணி இயக்குநர் சகோதரர் மார்கஸ் பெர்னாண்டஸ் (OFMCap) ஆகியோர் இணையவழியிலும் பங்கேற்றனர்.

சகோதரர் அரோக்கியம் ஜான் (OFM) வழிநடத்திய இவ்வமர்வில் (OFM)  சபையின் சகோதரி ஷெர்லி மரியம் ஜோசப் மற்றும் SSAM சபையின் சகோதரி ஜாக்குலின் மேரி ஆகியோர் துறவறப் பணிகளின் அனுபவங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து பேசிய சகோதரர் அல்போன்ஸ் வழப்பனாடி மற்றும் OFM மாகாணத் துணைப் பணியாளர் சகோதரர் சாஜி மாத்யூ ஆகியோர், மறைப்பணி என்பது திட்டமிட்ட நிகழ்வு மட்டுமல்ல அது "எதிர்பாராத சந்திப்புகளும் இதயப்பூர்வ உரையாடல்களும் நிறைந்த ஒரு பயணம்" என வலியுறுத்தினர்.

சென்னையில் நடைபெற்ற முதல் ஆசிய பிரான்சிஸ்கன் மறைப்பணியாளர் மாநாட்டில் அருட்சகோதரிகள் பங்கேற்றபோது.
சென்னையில் நடைபெற்ற முதல் ஆசிய பிரான்சிஸ்கன் மறைப்பணியாளர் மாநாட்டில் அருட்சகோதரிகள் பங்கேற்றபோது.

ஆசிய பிரான்சிஸ்கன் மறைப்பணியின் பங்களிப்புகள் குறித்த அமர்வில் FCC சபையின் சகோதரி பிரின்சி ரோஸ், MMB சபையின் சகோதரர் சன்னிலால் அவரப்பாட்டு மற்றும் பொதுநிலை பிரான்சிஸ்கன் சபையைச் (OFS) சேர்ந்த சகோதரர் ஒலிவர் பெர்னாண்டோ ஆகியோர் தங்களின் பார்வைகளை முன்வைத்தனர்.

நிகழ்வின் இடையே, SSAM சபையின் அருள்சகோதரி மார்கரெட் ஜூலி தலைமையில் செயல்முறைப் பணிப்பயிலரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்பாளர்கள் சிறுகுழுக்களாகப் பிரிந்து இன்றைய மறைப்பணிச் சவால்கள் குறித்து விவாதித்தனர்.

நிறைவுச் சிறப்புரையாற்றிய சகோதரர் நித்யா சகாயம் (OFMCap), புனித பிரான்சிஸின் 800ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு எதிர்கால மறைப்பணிக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார். தொடர்ந்து, AFM அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், திருத்தந்தையின் மறைப்பணியாளர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் டின் ஆன் ந்யூ நுயென் (OFMCnov) மற்றும் TAU இதழின் ஆசிரியரும், உரோமையிலுள்ள திருத்தந்தையின் அந்தோனியானும் பல்கலைக்கழகப் பேராசிரியருமான சகோதரர் அரோக்கியம் ஜான் (OFM) ஆகியோர் எதிர்கால கூட்டுப்பணிகளுக்கு அழைப்பு விடுத்தனர். சகோதரர் ஜோசப் ராஜ் (OFM) நன்றியுரை வழங்கினார்.

மாலை வேளையில், ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து தலைமையில் புனித செபஸ்தியார் ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புனித தோமையார் கல்லறை யாத்திரையும், பிரான்சிஸ்கன் குடும்பத்தினரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.பங்கின் பொதுநிலை பிரான்சிஸ்கன் சபை (OFS) உறுப்பினர்கள் திருவழிபாட்டைச் சிறப்பாக வழிநடத்தினர். பங்குத்தந்தை சகோதரர் அருண் ஜூன்ஸ் OFM மற்றும் பங்கு மக்களின் ஒத்துழைப்போடு இந்நிகழ்வுகள் சிறப்பாக அமைந்தன.

ஆகஸ்ட் 2, ஞாயிற்றுக்கிழமை அன்று பங்கேற்பாளர்கள் திருத்தூதர் புனித தோமையாரின் கல்லறையில் திருப்பலியில் பங்கேற்று, சென்னையிலுள்ள முக்கியமான பிரான்சிஸ்கன் மற்றும் மறைப்பணி வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிட்டனர். இத்துடன் முதல் ஆசிய பிரான்சிஸ்கன் மறைப்பணியாளர் மாநாடு நிறைவுற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

13 ஆகஸ்ட் 2026, 14:28