இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம். இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம்.  ( Indonesia's East Nusa Tenggara Province)

நிலநடுக்கத்திலும் பிளவுபடாத இந்தோனேசியா மக்களின் அன்பு

புளோரஸ் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளபோதிலும், மக்களிடையே வெளிப்பட்ட ஒற்றுமையும் சகோதரத்துவமும் நம்பிக்கை அளிப்பதாக என்டே பேராயர் பவுலஸ் புடி கிளெடன், SVD, தெரிவித்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 15, சனிக்கிழமையன்று புளோரஸ் தீவைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான ஆற்றல் மிக்க நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவிற்கு மத்தியிலும், இந்தோனேசியாவின் என்டே பகுதியைச் சேர்ந்த பேராயர் பவுலஸ் புடி கிளெடன் (SVD) அவர்கள், தனது நம்பிக்கையையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலநடுக்கம் பல உயிர்களைப் பலிவாங்கியுள்ளது, நூற்றுக்கணக்கானோரைக் காயப்படுத்தியுள்ளது, 5,000-க்கும் மேற்பட்ட மக்களை இடம்பெயரச் செய்துள்ளது, மேலும் வீடுகள், ஆலயங்கள், பள்ளிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டுக் கட்டிடங்களைச் சேதப்படுத்தியுள்ளது. 300-க்கும் மேற்பட்ட தொடர் அதிர்வுகளால் மக்கள் பயத்தை எதிர்கொண்டு வரும் வேளையில், பல குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

"இந்த அழிவுகளுக்கு மத்தியிலும், மக்களிடையே தான் கண்ட ஒற்றுமை போற்றத்தக்கது‌" என்று பேராயர் கிளெடன் அவர்கள் கூறியுள்ளார்.

இது குறித்து வத்திக்கான் செய்திக்கு அவர் அளித்த செய்தியில் "தங்கள் சொந்த வீடுகள் சேதமடைந்த குடும்பங்கள் கூடத் தங்கள் கதவுகளைத் திறந்து, உணவைப் பகிர்ந்து, அனைத்தையும் இழந்தவர்களுக்குத் தற்காலிக தங்குமிடங்களை அமைத்துக் கொடுத்துள்ளனர்" என்றும் "அவர்களது வீடுகள் பிளவுபட்டிருக்கலாம், ஆனால் அவர்களது அன்பு உடையவில்லை," என்றும் அவர் தெரிவித்தார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்தார்.

காரித்தாஸ் இந்தோனேசியா, அரசு மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து அவசர உதவிகளை வழங்க அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்துள்ள என்டே உயர்மறைமாவட்டம், குறிப்பாகக் குழந்தைகளுக்கு உளவியல் மற்றும் மனஅதிர்ச்சி சார்ந்த ஆதரவை வழங்குவதை தனது உடனடி முன்னுரிமைகளில் ஒன்றாக வைத்துள்ளது.

"இறைவன் நம்மைக் கைவிடவில்லை" என்று கூறிய பேராயர் கிளெடன் அவர்கள், இறைமக்களை நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று ஊக்கப்படுத்தியதுடன் புளோரஸ் மக்கள் குணமடைந்து, மீண்டும் தங்கள் வாழ்க்கையைத் கட்டியெழுப்பும் இந்த நீண்ட பயணத்தைத் தொடங்கும்போது, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் அவர்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

18 ஆகஸ்ட் 2026, 14:34