புனித மாக்சிமிலியான் கோல்பே புனித மாக்சிமிலியான் கோல்பே  

இன்றைய புனிதர்

புனித மாக்சிமிலியான் கோல்பே, கிறிஸ்தவ விசுவாசத்திற்காகவும் பிறரின் உயிரைக் காப்பதற்காகவும் தன் உயிரையே அர்ப்பணித்த மறைசாட்சி. அவரது பரிந்துரையால் போதைப் பழக்கத்திலிருந்து விடுதலை பெற்று, நம்பிக்கையுடன் புதிய வாழ்வைத் தொடங்க இறைவனிடம் மன்றாடுவோம்.

புனித மாக்சிமிலியான் கோல்பே

திரு. பிலோமி அலெக்ஸ்    

புனித மாக்சிமிலியான் மரியா கோல்பே அவர்கள் போலந்து நாட்டில் 1894ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் நாள் ஜூலியஸ் மரியா கோல்பே மற்றும் மரியா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ரேமண்ட் கோல்பே. சிறுவயது முதலே கீழ்ப்படிதலுடனும் இறைபக்தியுடனும் வளர்ந்தார். ஒருநாள் தனியாக இறைவேண்டலில் ஈடுபட்டிருந்தபோது, அன்னை மரியா அவருக்குக் காட்சி அளித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அன்னை மரியா, வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கொண்ட இரண்டு கிரீடங்களை அவருக்குக் காட்டினார். வெள்ளை கிரீடம் தூய்மையான வாழ்வையும், சிவப்பு கிரீடம் மறைசாட்சியின் வாழ்வையும் குறிக்கிறது என்று விளக்கி, “எது உமக்கு வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு மாக்சிமிலியான், “இரண்டையும் எனக்குத் தாருங்கள்” என்று பதிலளித்தார். இறைவனுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க விரும்பிய அவர், பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்தார். 1911ஆம் ஆண்டு தனது முதல் துறவற வார்த்தைப்பாட்டையும், 1914ஆம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவையும் பெற்றார். ஏழைகள் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த அவர், அவர்களின் வாழ்வு முன்னேற பல்வேறு உதவிகளைச் செய்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது, 1939ஆம் ஆண்டு நாசிப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலும் தனது கிறிஸ்தவ நம்பிக்கையைத் தளர விடாமல், சக கைதிகளுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கி, அவர்களுக்காக இறைவேண்டல் செய்தார். 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் நாள், ஆஷ்விட்ஸ் வதைமுகாமில், பிற கைதிக்குப் பதிலாகத் தன்னை அர்ப்பணித்த புனித மாக்சிமிலியான், நச்சு ஊசி செலுத்தப்பட்டு கொல்லப்பட்டார். திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் 1982ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் நாள் அவரைப் புனிதராக உயர்த்தி, மறைசாட்சிகளின் பாதுகாவலராகவும் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாவலராகவும் அறிவித்தார்.

புனித மாக்சிமிலியான் கோல்பேயின் திருநாளைக் கொண்டாடும் நாம், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுதலை பெற்று, நம்பிக்கையுடனும் நலமுடனும் புதிய வாழ்வைத் தொடங்கிட ஆண்டவர் இயேசுவிடம் இறைவேண்டல் செய்வோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

14 ஆகஸ்ட் 2026, 15:18