இன்றைய புனிதர்
புனித அகுஸ்தினார்
திரு. பிலோமி அலெக்ஸ்
புனித அகுஸ்தினார் கி.பி. 354ஆம் ஆண்டு வட ஆப்பிரிக்காவின் தகாஸ்தி பகுதியில், பத்ரிசியுஸ் மற்றும் புனித மோனிக்கா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இளமைக்காலத்தில் கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்த அகுஸ்தினார், பின்னர் உலக இன்பங்களால் ஈர்க்கப்பட்டு, கிறிஸ்தவ நம்பிக்கையிலிருந்து விலகினார். உயர்கல்விக்காக கார்த்தேஜ் நகருக்குச் சென்ற அவர், அங்கு மணிக்கேயக் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தார். தனது கல்வியை முடித்த பின்னர் பேராசிரியராகப் பணியாற்றிய அகுஸ்தினார், மாணவர்களிடம் அன்புடன் பழகி தனது பணியைச் சிறப்பாகச் செய்தார். கி.பி. 383ஆம் ஆண்டு மிலான் நகருக்குச் சென்றபோது, அங்கிருந்த ஆயர் புனித அம்புரோஸ் அவர்களின் மறையுரைகளால் ஈர்க்கப்பட்டார். இதன் மூலம் மணிக்கேயக் கொள்கை தவறானது என்பதை உணர்ந்து, மீண்டும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னர் குருவாக வேண்டும் என்ற விருப்பம் அவருக்குள் எழுந்தது. ஆயர் அம்புரோஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தனது 33ஆம் வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் தனது 42ஆம் வயதில் ஆயராக உயர்த்தப்பட்டார். மேலும், ஆண்களுக்கென ஒரு புதிய துறவற சமூகத்தையும் உருவாக்கினார். கி.பி. 430ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் நாள் ஆயர் அகுஸ்தினார் இறைவனடி சேர்ந்தார். தனது வாழ்வில் நாம் செய்யும் செயல்களுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், இறைவனின் உதவியோடு நமது ஆன்மாவைப் புனிதமாகக் காத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் போதித்தார். நற்பண்புகளைத் தேர்ந்தெடுத்து வாழ நம்மை அழைத்த புனித அகுஸ்தினாரின் திருவிழாவைக் கொண்டாடும் இந்நாளில், அவரது வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு, நற்பண்புகளைத் தேர்ந்தெடுத்து வாழ உறுதி ஏற்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.