2026.08.27 New Priests

துன்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் சான்றாகத் திகழும் மியான்மர் திருஅவை

மோதல், இடம்பெயர்வு மற்றும் வறுமை நிலவும் மியான்மரில், புதிய இறையழைத்தல்கள் மற்றும் மேய்ப்புப் பணித் தலைமைத்துவத்தின் மூலம் கத்தோலிக்கத் திருஅவை நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் மூன்று புதிய அருள்பணியாளர்கள், நான்கு திருத்தொண்டர்கள், இரண்டு துறவறச் சகோதரிகள் மற்றும் ஒரு புதிய இணை ஆயர் என பல்வேறு திருநிலைப்படுத்தல்கள் மற்றும் அர்ப்பணிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

தொடர்ச்சியான மோதல், இடம்பெயர்வு, வறுமை மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும், மியான்மரில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை புதிய இறையழைத்தல்கள் மற்றும் மேய்ப்புப் பணித் தலைமைத்துவத்தின் மூலம் நம்பிக்கையின் அடையாளங்களுக்குத் தொடர்ந்து சான்றளித்து வருகிறது.

ஆகஸ்ட் மாதத்தில், பர்மிய திருஅவை மூன்று புதிய அருள்பணியாளர்கள் மற்றும் நான்கு திருத்தொண்டர்களின் திருநிலைப்படுத்தல், இரண்டு இளம் பெண்களின் முதல் துறவற வார்த்தைபாடு மற்றும் ஒரு புதிய இணை ஆயரின் ஆயர் அருள்பொழிவு ஆகியவற்றை விமரிசையாகக் கொண்டாடியது.

ஆகஸ்ட் 14 அன்று, பிரின் ஊ லின் நகரில் உள்ள சலேசிய புகுநிலை துறவியர் இல்லத்தில், கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்களால் ஜான் ஃபியோ துரா ஆங் மற்றும் ஃப்ரேமோ வின் ஆகிய இரண்டு சலேசிய திருத்தொண்டர்கள் அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் "சுவர்களாக அல்லாமல் பாலம் போல செயல்பட" கர்தினால் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அடுத்த நாள், தாண்லினில் ஸ்டீபன் ஆங் சே சே யா மோ அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டு, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகப் பணியாற்ற அழைக்கப்பட்டார்.

ஹக்காவில், நான்கு பேர் திருத்தொண்டர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டனர், மேலும் இரண்டு இளம் பெண்கள் புனித வின்சென்ட் தே பவுல் சபைச் சகோதரிகளாகத் தங்களின் முதல் வார்த்தைப்பாட்டை அளித்து, ஏழைகளுக்கும் நலிவடைந்தவர்களுக்கும் சேவை செய்யத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.

ஆகஸ்ட் 6 அன்று, பெர்னார்டினோ நே நே அவர்கள், தவுங்கு மறைமாவட்டத்தின் இணை ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார். மியான்மரின் துன்பங்களுக்கு மத்தியிலும் கிறிஸ்துவின் ஒளி தொடர்ந்து ஒளிர்கிறது என்பதை கர்தினால் போ இறைமக்களுக்கு நினைவூட்டினார்.

இந்தக் கொண்டாட்டங்கள், பல இன்னல்களுக்கு மத்தியிலும், நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் தொண்டு உள்ளத்தோடு தன் மக்களோடு தொடர்ந்து பயணம் செய்யும் ஒரு திருஅவையை வெளிப்படுத்துகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

27 ஆகஸ்ட் 2026, 14:51