யாங்கூனில் ஷ்வேடகான் பகோடா – கோப்புப் படம் (2022) யாங்கூனில் ஷ்வேடகான் பகோடா – கோப்புப் படம் (2022) 

“வாசோ” காலம் மதங்களுக்கு இடையிலான அமைதிக்கான பாலமாக அமையும்: அருள்பணி கிரிஷ்

மியான்மரின் அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு மத்தியில், பௌத்தர்களின் “வாசோ” காலம் கிறிஸ்தவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே உரையாடல், இரக்கம் மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும் பாலமாக அமையும் என அருள்பணி கிரிஷ் சாண்டியாகோ, SJ தெரிவித்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

மியான்மரின் தற்போதைய அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு மத்தியில், பௌத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உரையாடல், இரக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கு பௌத்தர்களின் 'வாசோ' (Waso) காலம் ஒரு அர்த்தமுள்ள பாலமாக செயல்படும் என்று மியான்மர் இயேசு சபை வட்டாரத் தலைவர் அருள்பணி கிரிஷ் சாண்டியாகோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

வாசோ என அழைக்கப்படும் மூன்று மாத காலம் நீடிக்கும் பௌத்தர்களின் தவக்காலம் அல்லது மழைக்கால தியானம், மியான்மரில் பெரும்பான்மையாக வாழும் தேரவாத பௌத்தர்கள் எனப்படும் பௌத்த மதத்தின் மிகப் பழமையான பிரிவினருக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆன்மீகப் புதுப்பித்தல் காலமாகும். இக்காலத்தில், துறவிகள் இறைவேண்டல், தியானம் மற்றும் தங்களின் புனித நூலைப் படிப்பதற்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்கிறார்கள்.

அதேவேளையில், துறவிகள் அல்லாத பௌத்தர்கள் தங்கள் ஆன்மீக ஒழுக்கத்தை ஆழப்படுத்துவதுடன், துறவற சமூகங்களுக்குக் காணிக்கைகள் வழங்குவதன் மூலம் தங்கள் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்துகிறார்கள்.

வாசோ மற்றும் கத்தோலிக்க நம்பிக்கைக்கு இடையிலான ஆறு பகிரப்பட்ட ஆன்மீக விழுமியங்களை அருள்பணி சாண்டியாகோ அவர்கள் எடுத்துரைத்தார்: சிந்தனை மற்றும் செபம், ஆன்மீக ஒழுக்கம், பரிவு மற்றும் இரக்கம், அகிம்சை மற்றும் நல்லிணக்கம், எளிமை மற்றும் பற்றற்ற தன்மை, மற்றும் மதங்களுக்கிடையேயான நட்பு ஆகியவையே அந்த ஆறு பகிரப்பட்ட ஆன்மீக விழுமியங்களாகும்.

மெட்டா மற்றும் கருணா எனப்படும் பரிவு மற்றும் இரக்கம் குறித்த பௌத்த போதனைகள், கடவுளையும் அயலானையும் அன்பு செய்ய வேண்டும் என்ற கிறிஸ்தவ அழைப்போடு ஒத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தப் பகிரப்பட்ட விழுமியங்கள், இக்கட்டான காலங்களில் இரண்டு சமூகங்களும் ஒன்றாக இணைந்து பதிலளிக்கவும், விளிம்பு நிலை மக்களுக்குச் சேவை செய்யவும் ஊக்குவிக்கும்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் 'மகத்தான மானுடம்' (Magnifica humanitas) என்ற திருத்தூது மடலைக் குறிப்பிட்டு, உண்மையான மதங்களுக்கு இடையிலான உரையாடல் என்பது இறையியல் வேறுபாடுகளை மதிக்கும் அதே வேளையில், பகிரப்பட்ட மனித விழுமியங்களையும் பொதுவான நன்மையையும் ஊக்குவிக்கிறது என்பதை அருள்பணி சாண்டியாகோ அவர்கள் வலியுறுத்தினார்.

வாசோவின் செபம், தாராள குணம் மற்றும் இரக்கம் ஆகிய உணர்வுகள் மியான்மரில் அமைதி, குணமளித்தல் மற்றும் நல்லிணக்கத்திற்குப் பங்களிக்கும் என்றும் அவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

14 ஆகஸ்ட் 2026, 14:56