2026.07.14 viviliya thedal 5

விவிலியத் தேடல்

ஆண்டவரே நமது பாறையும் அரணும்; எந்தச் சூழ்நிலையிலும் அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம்.

திபா 144: 1, 2, 9–10

பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
அருட்பணி. அருள் சந்தோஷ்

கிறிஸ்து இயேசுவின் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!

இன்று நாம் தியானிக்கும் திருப்பாடல் 144-ன் பல்லவி, “என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!” என்று அமைந்துள்ளது. இந்தத் திருப்பாடல் முழுவதிலும், ஆண்டவர் தமக்கு பாதுகாப்பையும் வலிமையையும் அளித்ததற்காக திருப்பாடல் ஆசிரியர் இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்துகிறார். இந்தத் திருப்பாடல் 15 வசனங்களைக் கொண்டது. “கடவுள் யார்?” என்ற கேள்விக்கு இந்தத் திருப்பாடல் அழகான பதிலைத் தருகிறது. இறைவன் பாறையாகவும், கேடயமாகவும், அரணாகவும், கோட்டையாகவும், பாதுகாப்பவராகவும், வழிகாட்டுபவராகவும் இருக்கிறார். அதேவேளையில், “மனிதர்கள் யார்?” என்பதையும் திருப்பாடல் எடுத்துரைக்கிறது. மனித வாழ்க்கை நிலையற்றது. மனிதர்கள் சிறு மூச்சைப் போன்றவர்கள்; அவர்களின் நாட்கள் நிழலைப் போன்றவை. மனித வலிமையும் வரம்புக்குட்பட்டது. எனவே, மனிதர்கள் தங்களுடைய வலிமையை நம்புவதைக் காட்டிலும், இறைவனை நம்பி வாழ வேண்டும். திருப்பாடல் ஆசிரியர் தமது வாழ்க்கையில் ஏற்பட்ட போராட்டங்களையும் ஆபத்துகளையும் நினைவுகூர்கிறார். அந்த இக்கட்டான நேரங்களில் இறைவனே தமக்குத் துணையாகவும், பாதுகாப்பாகவும், பக்கபலமாகவும் இருந்தார் என்பதை உணர்கிறார். அதனால், “ஆண்டவரே, உமது கையை நீட்டி என்னை விடுவியும்” என்று இறைவனிடம் மன்றாடுகிறார்.

அன்புச் சகோதர சகோதரிகளே!

நம் வாழ்விலும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகள் வரலாம். சில நேரங்களில் மனிதர்களை நம்பியிருப்பவர்கள் நம்மைக் கைவிடலாம். ஆனால், நாம் இறைவனை முழுமையாக நம்பும்போது, அவர் நமக்குப் பாறையாகவும், அரணாகவும், கோட்டையாகவும் இருந்து நம்மைப் பாதுகாத்து வழிநடத்துவார். இயேசுவும் தனது போதனையில், பாறையின் மீது அடித்தளம் அமைத்த வீட்டைப் பற்றி எடுத்துரைக்கிறார். மழை பெய்தாலும், ஆறு பெருக்கெடுத்து வந்தாலும், அந்த வீடு நிலைத்திருக்கும். அதுபோல, நம் வாழ்க்கையின் அடித்தளம் இறைவன் மீது அமைந்திருந்தால், எத்தகைய சோதனைகள் வந்தாலும் நாம் உறுதியாக நிலைத்திருக்க முடியும். திருப்பாடல் 100 கூறுவதுபோல், ஆண்டவரே கடவுள் என்பதை நாம் உணர வேண்டும். அவரே நம்மைப் படைத்தவர்; நாம் அவருடைய மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்.

எனவே, இன்று நாம் இரண்டு முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.

முதலாவது:
ஆண்டவரே நமது பாறை. எனவே, எந்தச் சூழ்நிலையிலும் அவரையே உறுதியாகப் பற்றிக்கொள்வோம்.

இரண்டாவது:
இறைவன் நம்மைப் பாதுகாத்து, நம் வாழ்வில் நன்மைகளை வழங்கும்போது, அவரைப் புகழ்ந்து நன்றி செலுத்துவோம். நம் குடும்பம், பணிகள், உடைமைகள், வாழ்வாதாரம் என அனைத்தும் இறைவனின் கொடைகளே என்பதை உணர்வோம். திருப்பாடல் ஆசிரியரைப் போல, நாமும் பாடி, புகழ்ந்து, இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

செபம்

எங்களைப் படைத்து, பராமரித்து, வழிநடத்தும் வல்லமையுள்ள உயிருள்ள இறைவனே! இந்த அருமையான நாளுக்காக உமக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறோம். ஒவ்வொரு நாளும் எங்களோடு இருந்து, பாறையாகவும், அரணாகவும், கோட்டையாகவும் இருந்து எங்களைப் பாதுகாத்து வருகிறீர். ஆண்டவரே, மனிதர்களிடமிருந்து வரும் பிரச்சினைகள் மற்றும் துன்பங்களிலிருந்து எங்களை விடுவித்தருளும். எதைக் கண்டும் அஞ்சாமல், உம்மீது ஆழமான நம்பிக்கை வைத்து வாழும் அருளை எங்களுக்குத் தந்தருளும். எங்கள் குடும்பங்களையும், பணிகளையும், வாழ்வாதாரத்தையும் ஆசீர்வதித்தருளும். ஒவ்வொரு நாளும் உமது பாதுகாப்பில் நாங்கள் நிலைத்திருக்க அருள்புரியும். ஆமென்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

11 ஆகஸ்ட் 2026, 14:27