Catholic Action என்ற கத்தோலிக்க நடவடிக்கை அமைப்பினருடன் திருத்தந்தை Catholic Action என்ற கத்தோலிக்க நடவடிக்கை அமைப்பினருடன் திருத்தந்தை  (Vatican Media)

பிரான்சின் கத்தோலிக்க நடவடிக்கை அமைப்பினருக்கு திருத்தந்தை உரை

பார்த்தல், தீர்ப்பிடுதல், செயல்படுதல் ஆகிய மூன்று விடயங்களை மையப்படுத்தியதாக உங்கள் வாழ்வு அமையவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 13, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்தித்த பிரான்ஸ் நாட்டின் Catholic Action என்ற கத்தோலிக்க நடவடிக்கை அமைப்பின் பொறுப்பாளர்களுக்கு உரை ஒன்றை வழங்கினார்.

பார்த்தல், தீர்ப்பிடுத்தல், செயல்படுதல் என மூன்று விடயங்களை மையப்படுத்தி பேசத்தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலாவதாக, இயேசுவின் வாழ்வும் போதனைகளும் நம்மில் ஏற்படுத்திய தாக்கங்கள், மற்றும் திருஅவையின் போதனைகள், சவால்கள், ஆற்றிவரும் பணிகள் ஆகியவற்றைக் குறித்து நினைவுபடுத்தி பார்க்கவேண்டும் என்றும், முழுமையான மற்றும் ஒளிரும் நினைவுகள் இல்லாமல் நாம் ஒருபோதும் வளரவோ முன்னேறவோ முடியாது, என்றும் கோடிட்டுக்காட்டிப் பேசினார்.

தீர்ப்பிடுதல் என்பதை இரண்டாவது கருத்தாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மைச்சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை நாம் உற்றுநோக்கி ஆராய்ந்து தீர்ப்பிடவேண்டும் என்றும், லூக்கா நற்செய்தியில் வரும் நல்ல சமாரியரைப் போன்றதாய் உங்கள் செயல்கள் அமையவேண்டும் என்றும், தெளிந்து தேர்ந்து தீர்ப்பிடும் செயல்கள் தூய ஆவியின் அருளால் கொடுக்கப்படுகிறது, அதனையே உங்கள் வாழ்விலும் நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்றும் எடுத்துக்காட்டினார்.

மூன்றாவது பண்பாக, செயல்படுதல் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, “அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர்” (மாற்கு 16:20) என்று மாற்கு நற்செய்தியில் வரும் சீடர்களின் வாழ்வைப்போல், உங்களது அன்றாட பணிகளில் இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பதை, நீங்கள் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொடர்ந்து உருவாகி வரும் எதார்த்தத்திற்கு ஏற்ப, உங்களின் இதயங்களில் கடவுளின் செயலை ஆதரிப்பதும் ஊக்குவிப்பதும் உங்களின் பங்காக அமையவேண்டும் என்று கூறித்  தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 January 2022, 15:21