வரும் ஞாயிறன்று, பொதுமக்களுக்கு ஆசீர் வழங்குகிறார் திருத்தந்தை!
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 23, நாளை ஞாயிறன்று, பிற்பகல் 12 மணியளவில், உரோமை ஜெமெல்லி மருத்துவமனையில் பொதுமக்களைச் சந்தித்து ஆசீர் வழங்கவிருப்பதாகத் திருப்பீடத் தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் உரோமையில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூச்சுக்குழாய் அழற்சி நோய்க்கெனெ சிகிச்சை பெற்று வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மொத்த சிகிச்சை நாள்கள், மார்ச் 23, நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் ஏறக்குறைய 37 நாள்களாகின்றன.
இதன் காரணமாக, அவரது தனிப்பட்ட மற்றும் பொதுச் சந்திப்புக்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்ட நிலையில் மூவேளை செப உரை, மறைக்கல்வி உரை, யூபிலி ஆண்டு திருப்பயணிகளுக்கான உரைகள் போன்றவற்றை எழுத்துப்படிவமாக மக்களுக்கு வழங்கி வருகின்றார் திருத்தந்தை.
திருத்தந்தையின் உடல் நிலையில், சீரான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த மார்ச் 6, வியாழக்கிழமையன்று, தனக்காக செபிக்கும் மக்களுக்கு அவர் நன்றி கூறும் ஒலிப்பதிவு ஒன்றும், மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமையன்று, மருத்துவமனை சிற்றாலயத்தில் அவர் செபிப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் திருப்பீடத் தகவல் தொடர்பகத்தால் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை நாளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருத்துவமனையின் பத்தாவது தளத்தில் இருந்தவாறே பொதுமக்களைச் சந்தித்து ஆசீர் வழங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது திருப்பீடத் தகவல் தொடர்பகம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் உடல் நலம் கருதி பொதுச் சந்திப்புக்கள் தவிர்க்கப்பட்ட நிலையில், 37 நாள்கள் கழித்து முதன்முறையாக மருத்துவமனையில் இருந்தவாறே இறைமக்களைச் சந்தித்து ஆசீர் வழங்க இருக்கின்றார் திருத்தந்தை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
திருத்தந்தை இறைமக்களை வாழ்த்தி ஆசீர் வழங்கும் இந்நிகழ்வினை வத்திக்கான் சமூக ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்ப இருக்கின்றன.
வத்திக்கான் வலையொளி https://www.youtube.com/watch?v=z5zjiFNne_c
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
