ஜூன் மாதத்தில் திருத்தந்தை கலந்துகொள்ளும் நிகழ்வுகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஜூன் மாதத்தில் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் கலந்து கொள்ளவிருக்கும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் குறித்த விவரங்களை மே 21, புதனன்று வெளியிட்டது திருப்பீடம்.
ஜூன் மாதம் முதல் தேதி உரோம் நகர் புனித பேதுரு பெருங்கோவிலில் குடும்பங்கள், குழந்தைகள், தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோருக்கான யூபிலி திருப்பலியை உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு நிறைவேற்றுவார் திருத்தந்தை 14ஆம் லியோ.
அதற்கு அடுத்த ஞாயிறான ஜூன் 8ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தூய ஆவியார் பெருவிழவை முன்னிட்டு, இயக்கங்கள், குழுக்கள் மற்றும் புதிய சமூகங்களுக்கான யூபிலிக் கொண்டாட்டங்கள் இடம்பெறும்.
அதற்கு அடுத்த நாள் ஒன்பதாம் தேதி திருப்பீடத்திலுள்ளோருக்கான யூபிலிக் கொண்டாட்டம் காலை 11.30 மணிக்குத் திருப்பலியுடன் இடம்பெறும்.
ஜூன் 13ஆம் தேதியன்று, காலை 9 மணிக்கு, சில புனிதர்பட்ட நிலைக்கான வாக்கெடுப்பிற்கென கர்தினால்கள் கூட்டம் திருப்பீடத்தில் இடம்பெறுவதோடு, ஜூன் 15ஆம் தேதி தூய மூவொரு கடவுளின் பெருவிழாவையொட்டி காலை 10.30 மணிக்கு திருத்தந்தையின் திருப்பலியுடன் விளையாட்டுத்துறையினருக்கான யூபிலிக் கொண்டாட்டங்கள் இடம்பெறும்.
ஜூன் மாதம் 22ஆம் தேதி இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி புனித மேரி மேஜர் பெருங்கோவில் நோக்கி விசுவாசிகளுடன் ஊர்வலமாகச் சென்று அங்கு நற்கருணை ஆசீர் வழங்குவார் திருத்தந்தை 14ஆம் லியோ.
ஜூன் 27, இயேசுவின் திருஇருதய திருவிழாவன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் காலை 9 மணிக்கு திருப்பலி நிறைவேற்றி அருள்பணியாளர்களுக்கான யூபிலிக் கொண்டாட்டத்தை சிறப்பிப்பார் திருத்தந்தை.
புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் திருவிழாவை முன்னிட்டு ஜூன் 29ஆம் தேதி புனித பேதுரு பெருங்கோவிலில் காலை 9.30 மணிக்குத் திருப்பலி நிறைவேற்றி உயர் மறைமாவட்டங்களில் பணிபுரியும் பேராயர்களுக்கான பால்யங்களை ஆசீர்வதிப்பார் திருத்தந்தை 14ஆம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
