சொந்த நாடுகளுக்குத் திரும்பும் சாகோஸ் புலம்பெயர்ந்தோர்
மெரினா ராஜ் - வத்திக்கான்
சாகோஸ் புலம்பெயர்ந்தோர் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான புதுப்பிக்கப்பட்ட வாய்ப்பு பன்னாட்டு அரங்கில் ஓர் ஊக்கமளிக்கும் அறிகுறியாகவும் சக்திவாய்ந்த அடையாளமாகவும் உள்ளது என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்டு 23, சனிக்கிழமை வத்திக்கானில் சாகோஸ் புலம்பெயர்ந்தோர் குழுவின் Port Louis பகுதி மண்டலக்குழுவினர் ஏறக்குறைய 15 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், சாகோஸ் மக்கள், தங்கள் தீவு நாட்டிற்குத் திரும்புவதற்காக பல்வேறு ஆண்டுகளாக அயராது உழைத்த அக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
சிறியவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் என சாகோஸ் தீவுப்பகுதியைச் சார்ந்த அனைத்து மக்களும், அவர்களின் அடையாளம், மாண்பு, குறிப்பாக அவர்களின் நிலத்தில் வாழும் உரிமை போன்றவற்றால், ஆற்றல் மிக்க அனைத்து நிலையினராலும் மதிக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
2023-ஆம் ஆண்டு ஜூன் 10, அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து புலம்பெயர்ந்தோர் பணிக்கான ஊக்கத்தினைப் பெற்ற அக்குழுவினர் இரண்டாண்டுகளின் முடிவில் மொரீஷியஸ் குடியரசிற்கு சாகோஸ் தீவுக்கூட்டம் திரும்புவது குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.
தங்களது பணிகளில் பல்வேறு இன்னல்கள் மற்றும் இடர்ப்பாடுகளை சந்தித்த அக்குழுவினரின் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையைக் கண்டு அவர்களைப் பாராட்டிய திருத்தந்தை அவர்கள், திருப்பாடல் 126 எடுத்துரைக்கும் இறைவார்த்தைகளான, “கண்ணீருடன் விதைப்பவர்கள் மகிழ்ச்சியுடன் அறுவடை செய்வார்கள்” என்பதை எடுத்துரைத்து அதன் வழியாகக் கடவுளுக்கு நாம் நன்றி செலுத்துவோம், அவர் நமக்காக ஏராளமான அற்புதங்களைச் செய்துள்ளார் என்றும் கூறினார்.
நாடுகடத்தப்பட்ட ஆண்டுகள் மக்கள் மத்தியில் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும், வறுமை, அவமதிப்பு மற்றும் ஒதுக்குதலை இக்காலத்தில் மக்கள் அனுபவித்திருந்தாலும் இனிவரும் காலத்தில் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையில், கடவுள் அவர்களின் காயங்களை குணப்படுத்தி, அநீதி இழைத்தவர்களை மன்னிக்கும் ஆற்றலைத் தருவார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
