பன்னாட்டுக் கத்தோலிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வலையமைப்பினருடன் திருத்தந்தை பன்னாட்டுக் கத்தோலிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வலையமைப்பினருடன் திருத்தந்தை  (@Vatican Media)

இணைப்பின் பாலங்களைக் கட்டுபவர்களாக இருப்போம் - திருத்தந்தை

சவால்கள் மகத்தானவை எனினும், மனித இதயங்களில் செயல்படும் கடவுளின் அருள் இன்னும் ஆற்றல் வாய்ந்தது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கத்தோலிக்க சட்டமியற்றுபவர்கள் மற்றும் பொதுநிலை ஊழியர்கள், மனித நகரத்திற்கும் கடவுளின் நகரத்திற்கும் இடையில் இணைப்பின் பாலத்தினைக் கட்டுபவர்களாக இருக்க அழைக்கப்படுகிறார்கள் என்றும், மனசாட்சி, மனித மாண்பிற்குப் பணியாற்றும் சட்டம் மற்றும் அதிகாரம் கொண்ட ஓர் உலகத்திற்காக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 23, சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் பன்னாட்டுக் கத்தோலிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வலையமைப்பின் பதினாறாவது ஆண்டுக் கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 150 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.   

“புதிய உலக ஒழுங்கு: பெரிய அதிகார அரசியல், பெருநிறுவன ஆதிக்கங்கள் மற்றும் மனித செழிப்பின் எதிர்காலம்” என்ற கருப்பொருளில் சிறப்பிக்கப்படும் பதினாறாவது ஆண்டுக் கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், உலகம் செல்ல தேர்ந்தெடுத்த திசை பற்றியக் கவலை, கடவுளின் விருப்பப்படி ஒவ்வொரு மனிதரும் அமைதி, முழுமன விடுதலை மற்றும் நிறைவு கொண்டு செழிப்புடன் வாழ்வதற்கான ஏக்கம் ஆகிய இரண்டையும் இவ்வாண்டிற்கான கருப்பொருளில் காண்பதாகவும் எடுத்துரைத்தார்.

உரோமானியக் காலத்தின் பிற்பகுதியில் திருஅவையின் முன்னணி குரலாக, மகத்தான எழுச்சிகளையும் சமூக சிதைவையும் கண்ட ஹிப்போ நகரத்து ஆயரான புனித அகுஸ்தினார், தற்போதைய சூழல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, கடவுளின் நகரம் என்ற படைப்பை எழுதினார் என்றும், அது இன்றும் நம்பிக்கை நிறைந்த பார்வையையும் கண்ணோட்டத்தையும் அர்த்தத்தையும் வழங்குகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

மனித வரலாற்றில், மனிதனின் நகரம் மற்றும் கடவுளின் நகரம் என்னும் இரண்டு நகரங்கள் பின்னிப்பிணைந்துள்ளன என்றும், இவை இரண்டும் ஆன்மிக எதார்த்தங்களைக் அடையாளப்படுத்தி, மனித இதயத்தின் இரண்டு நோக்குநிலைகளாகவும், மனித நாகரிகமாகவும் திகழ்கின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

மனித நகரம் – கடவுளின் நகரம்

பெருமை மற்றும் சுய அன்பின் மீது கட்டமைக்கப்பட்ட மனித நகரம், அதிகாரம், கௌரவம் மற்றும் இன்பத்தைத் தேடுவதன் வழியாகக் குறிக்கப்படுகிறது என்றும், தன்னலமற்ற தன்மைக்கு கடவுள் அன்பின் மீது கட்டமைக்கப்பட்ட கடவுளின் நகரம், நீதி, தர்மம் மற்றும் பணிவு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

உண்மையான மனித செழிப்பு என்பது திருஅவையின் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி அல்லது அனைத்து பரிமாணங்களிலும் ஒரு நபரின் முழு வளர்ச்சி என்று அழைப்பதிலிருந்து உருவாகிறது என்றும், உடல், சமூகம், கலாச்சாரம், தார்மீக மற்றும் ஆன்மீகம் மனிதனுக்கான இயற்கை சட்டத்தில் வேரூன்றியுள்ளது, கடவுள் மனித இதயத்தில் எழுதியுள்ள அடிப்படை ஒழுங்கு, அதன் ஆழமான உண்மைகள் கிறிஸ்துவின் நற்செய்தியால் ஒளிரச் செய்யப்படுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

தனிநபர்கள் நல்லொழுக்கத்துடனும் ஆரோக்கியமான சமூகங்களிலும் வாழ்ந்து, தங்களிடம் உள்ளதை மட்டுமல்ல, கடவுளின் குழந்தைகளாக அவர்கள் யார் என்பதையும் அனுபவிக்கும்போது உண்மையான மனித செழிப்பு காணப்படுகிறது என்றும், இது உண்மையைத் தேடுவதற்கும், கடவுளை வணங்குவதற்கும், குடும்பங்களை அமைதியில் வளர்ப்பதற்கும் சுதந்திரத்தை உறுதி செய்கிறது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

படைப்போடு இணக்கத்தையும், சமூக வகுப்புகள் மற்றும் நாடுகளுக்கு இடையே ஒற்றுமை உணர்வையும் உள்ளடக்கியது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், உண்மையில், நாம் "வாழ்வைப் பெறவும், அதை ஏராளமாகக் பெறவும்" (யோவான் 10:10) கடவுள் வந்தார் என்றும் எடுத்துரைத்தார்.

எதுவும் மாற முடியாது என்று கூறும் ஆபத்தானதும், தன்னைத்தானே தோற்கடிப்பதுமான மனநிலையை நிராகரிக்க வேண்டும் என்றும், சவால்கள் மகத்தானவை எனினும், மனித இதயங்களில் செயல்படும் கடவுளின் அருள் இன்னும் ஆற்றல் வாய்ந்தது என்றும் மொழிந்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஆகஸ்ட் 2025, 12:17