பிறரன்புச் செயல்களில் உண்மையுடன் நிலைத்து நிற்க நம்மை அழைக்கும் இயேசு

இயேசு, தனது இறையரசுப்பணி மற்றும் தன்னைப் பின்பற்றுபவர்கள் ஆற்றும் மறைப்பணி என்பது ரோஜாக்களும் மலர்களும் நிறைந்தது அல்ல மாறாக அது எதிர்க்கப்படும் அடையாளம் என்று கூறுகின்றார் - திருத்தந்தை பதினான்காம் லியோ.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நன்மை செய்யும் மனநிலையை விட்டுவிடாமல், நம் சொந்த நன்மைக்காகவும், அனைவரின் நன்மைக்காகவும், நமக்குத் துன்பத்தை ஏற்படுத்துபவர்களுக்காகவும் தொடர்ந்து செயல்பட இயேசு நமக்கு உதவுகின்றார் என்றும், துன்புறுத்தலுக்கு பழிவாங்கலுடன் பதிலளிக்காமல், பிறரன்பு செயல்களில் உண்மையுடன் நிலைத்து நின்று நன்மையைச் செய்ய அவர் நம்மை அழைக்கிறார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 17, ஞாயிறன்று காஸ்தல் கந்தோல்போ திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லத்தின் முன்புறம் உள்ள லிபர்த்தா வளாகத்தில் கூடியிருந்த இறைமக்களுக்கு ஆற்றிய நண்பகல் மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இன்றைய நற்செய்தியின் வாயிலாக இயேசு, தனது இறையரசுப்பணி மற்றும் தன்னைப் பின்பற்றுபவர்கள் ஆற்றும் மறைப்பணி என்பது ரோஜாக்களும் மலர்களும் நிறைந்தது அல்ல. மாறாக, அது எதிர்க்கப்படும் அடையாளம் என்று கூறுகின்றார் என எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

தனது வார்த்தைகளின் வழியாக, எருசலேமில் இயேசு மக்களால் எதிர்க்கப்படுதல், கைது செய்யப்படுதல், அவமதிக்கப்படுதல், அடிக்கப்படுதல், சிலுவையில் அறையப்படுதல் போன்றவற்றை எடுத்துரைக்கின்றார் என்றும், அவரது நற்செய்தியானது, அன்பு மற்றும் நீதியைப் பற்றிப் பேசினாலும் அது, நிராகரிக்கப்படுகின்றது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

தலைவர்கள் இயேசுவினது போதனைக்குக் கடுமையாக எதிர்வினையாற்றினர் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நற்செய்தியாளர் லூக்கா தனது திருத்தூதர் பணிகள் நூலில், சீடர்கள் துன்புற்றாலும், “நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்”. என்று வலியுறுத்துகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இவை அனைத்தும், “நன்மை எப்போதும் அதைச் சுற்றி நேர்மறையான எதிர்வினையைக் காணாது” என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன என்றும்,  உண்மையில், சில நேரங்களில், நன்மையின் அழகு அதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு எரிச்சலூட்டுவதால், நன்மை செய்பவர்கள் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கிறார்கள், துன்புறுத்தல் மற்றும் முறைகேடுகளை அனுபவிக்கிறார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

உண்மையாகச் செயல்படுவது ஒரு விலையைக் கொண்டுள்ளது, ஏனென்றால் உலகில் பொய்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் இருக்கிறார்கள் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அலகையானது இதைப் பயன்படுத்திக் கொண்டு, பெரும்பாலும் நல்லவர்களின் செயல்களைத் தடுக்க முயற்சிக்கின்றது என்றும் எடுத்துரைத்தார்.

மறைசாட்சிகள் தங்களது கிறிஸ்தவ நம்பிக்கைக்காக இரத்தத்தை சிந்துவதன் வழியாக இதற்கு சாட்சியமளிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், நாமும், வெவ்வேறு சூழ்நிலைகளிலும், வெவ்வேறு வழிகளிலும், அவர்களைப் பின்பற்றலாம் என்றும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஆகஸ்ட் 2025, 14:10