வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்கள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்கள்   (@Vatican Media)

போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொடர்ந்து செபிப்போம்

ஹெய்ட்டி மக்களின் நிலைமை பெருகிய முறையில் மோசமாகி வருகிறது. கொலைகள், அனைத்து வகையான வன்முறைகள், மனித வர்த்தகம், கட்டாய நாடுகடத்தல் மற்றும் கடத்தல்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வருகின்றன. – திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொடர்ந்து செபிப்போம் என்றும், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவெடிப்புகளின் 80வது ஆண்டு நிறைவானது, மோதல்களைத் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக, போரை நிராகரிப்பதற்கான அவசியமான தேவையை உலகம் முழுவதும் மீண்டும் எழுப்பியுள்ளது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 10, ஞாயிறன்று வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், முடிவுகளை எடுப்பவர்கள் தங்கள் தேர்வுகளின் விளைவுகளுக்கான பொறுப்பை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும் என்றும், பலவீனமானவர்களின் தேவைகளையும், அமைதிக்கான உலகளாவிய விருப்பத்தையும் அவர்கள் புறக்கணிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

மேலும் கூட்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அர்மீனியா மற்றும் அஜர்பைஜானை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இந்நிகழ்வு தெற்கு காகசஸில் நிலையான மற்றும் நீடித்த அமைதிக்கு பங்களிக்கும் என்று நம்புவதாகவும் எடுத்துரைத்தார்.

ஹெய்ட்டி மக்களின் நிலைமை பெருகிய முறையில் மோசமாகி வருகிறது என்று நினைவூட்டிய திருத்தந்தை அவர்கள், கொலைகள், அனைத்து வகையான வன்முறைகள், மனித வர்த்தகம், கட்டாய நாடுகடத்தல் மற்றும் கடத்தல்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்றும் கூறினார்.

பிணையக்கைதிகளை உடனடியாக விடுவிக்க பொறுப்பான அனைவருக்கும் மனமார்ந்த வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை அவர்கள், ஹெய்ட்டி மக்களை நிம்மதியாக வாழ அனுமதிக்கும் சமூக மற்றும் நிறுவன நிலைமைகளை உருவாக்குவதில் பன்னாட்டு சமூகத்தின் உறுதியான ஆதரவைக் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

உரோம் இத்தாலி மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து  வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஆகஸ்ட் 2025, 13:28