Gozo அன்னை மரியா திருத்தலம் Gozo அன்னை மரியா திருத்தலம்  

கோஷோ விண்ணேற்பு அன்னை மரியா திருத்தலத்தின் 50ஆவது ஆண்டு

1791- ஆம் ஆண்டு முதல் திருத்தலத்தின் பலிபீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் விண்ணேற்பு உருவத்தின் முடிசூட்டு விழாவின் ஐம்பதாவது ஆண்டு விழா, அப்பகுதியில் வாழ்கின்ற நம்பிக்கை நிறைந்த பக்தி மற்றும் விசுவாசத்தில் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றது. - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

தூய கன்னியான அன்னை மரியா இறைத்திருவுளத்திற்காகக் கடவுளால் எல்லா படைப்புக்களுக்கும் முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்டு முன்குறிக்கப்பட்டவர் என்றும், கடவுளது அருளை நமக்குப் பெற்றுத் தரும் பரிந்துரையாளராகவும் கிறிஸ்துவின் மீட்புத்திட்டத்தில் உலக மக்களை ஈடுபடுத்துவதற்காக மக்களால் இடைவிடாது போற்றிப்புகழப்படுபவராகவும் இருக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 15, அன்னை மரியின் விண்ணேற்புப் பெருவிழாவை முன்னிட்டு மால்டாவின் கோஷோ மறைமாவட்டத்தில் உள்ள தூய விண்ணேற்பு அன்னை திருத்தலத்தில் வைக்கப்பட்டிருக்கும் அன்னை மரியா திருஉருவத்தின் 50ஆவது ஆண்டை முன்னிட்டு அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இத்திருப்பலியில் திருத்தந்தையின் சார்பில் பங்கேற்க உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது செயலாளர் கர்தினால் மாரியோ கிரேக் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.     

உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் உருவங்களில் அன்னை மரியா மக்களால் வணங்கிப் போற்றப்படுகின்றார் என்றும், கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள், அன்னை மரியா மீது தங்களுக்குள்ள பக்தி மற்றும் ஆர்வத்தை இனிமையான மனதுடன் தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற கற்களால் அன்னையின் திரு உருவத்தை அலங்கரித்து, மனிதர்கள் மீது கடவுள் வெளிப்படுத்தும் விவரிக்க முடியாத அன்பை நமக்குக் கற்பிக்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

இந்நிகழ்வில் பங்கேற்க இருக்கும் அனைத்து நிலை மக்களையும் மனதார வாழ்த்தியுள்ள திருத்தந்தை அவர்கள்,  எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டில் அனைவருக்கும் நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்பின் சாட்சியத்தை இதயத்திலிருந்து வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

1791- ஆம் ஆண்டு முதல் திருத்தலத்தின் பலிபீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் விண்ணேற்பு உருவத்தின் முடிசூட்டு விழாவின் ஐம்பதாவது ஆண்டு விழா, அப்பகுதியில் வாழ்கின்ற நம்பிக்கை நிறைந்த பக்தி மற்றும் விசுவாசத்தில் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஆகஸ்ட் 2025, 11:50