ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டுத் தாக்குதலின் 80-ஆம் ஆண்டு நினைவு
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் அணுகுண்டுத் தாக்குதல்களின் 80ஆவது ஆண்டு நினைவானது, இதனால் உயிரிழந்தவர்கள், அன்புக்குரியவர்களைப் பிரிந்தவர்கள் போன்றோரின் இழப்பு மற்றும் துன்பக் கதைகள் பாதுகாப்பான உலகத்தைக் கட்டியெழுப்பவும் அமைதியின் சூழலை வளர்க்கவும் நம் அனைவருக்கும் சரியான நேரத்தில் அழைப்பு விடுக்கின்றன என்று எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்டு 6, புதன்கிழமையன்று ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் அணுகுண்டுத் தாக்குதல்களின் என்பதாவது ஆண்டு நினைவை முன்னிட்டு ஹிரோஷிமா மறைமாவட்ட ஆயர் Alexis Mitsuru Shirahama அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி எடுத்துரைக்கும் வார்த்தைகளான “போர் என்பது எப்போதும் மனித குலத்திற்கான ஒரு தோல்வி தான்” என்பதை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை அவர்கள், பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இரண்டு நகரங்களும் அணு ஆயுதங்களால் ஏற்பட்ட ஆழ்ந்த பயங்கரங்களின் உயிருள்ள நினைவூட்டல்களாகவே உள்ளன என்றும் எடுத்துரைத்துள்ளார்.
விவரிக்க முடியாத பேரழிவை ஏற்படுத்தும் சக்தி கொண்ட ஆயுதங்களை கீழே போடுவதே உண்மையான அமைதி என்றும், அணு ஆயுதங்கள் நமது பகிரப்பட்ட மனிதகுலத்தை புண்படுத்துகின்றன, மேலும் நாம் பாதுகாக்க அழைக்கப்பட்ட படைப்பின் மாண்பை இழக்கச் செய்கின்றன என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
உலகளாவிய பதட்டங்கள் மற்றும் மோதல்கள் அதிகரித்து வரும் நமது காலத்தில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி "நினைவின் சின்னங்களாக" நிற்கின்றன என்றும், அவை நல்லிணக்கத்தின் அடிப்படையில் உறுதியளிக்கப்பட்டு அழிவின் அடிப்படையில் நிறுவப்பட்ட பாதுகாப்பு என்ற மாயையை நிராகரிக்க நம்மைத் தூண்டுகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
நீதி, சகோதரத்துவம் மற்றும் பொது நன்மை ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு உலகளாவிய நெறிமுறையை நாம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள் இந்த யூபிலி ஆண்டானது, நமது முழு மனித குடும்பமும் நீடித்த அமைதியைப் பின்தொடர்வதற்கான உறுதிப்பாட்டை புதுப்பிக்க பன்னாட்டு சமூகத்திற்கு விடுக்கும் ஓர் அழைப்பாக அமைய வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
