ஏமன் கடற்கரைக் கப்பல் விபத்தில் இறந்தோருக்கு இரங்கல் செய்தி
மெரினா ராஜ் – வத்திக்கான்
எத்தியோப்பியாவிலிருந்து ஏமனின் தெற்குக் கடற்கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த புலம்பெயர்ந்தோர் பலர், பேரழிவு தரும் கப்பல் விபத்தில் இறந்ததை முன்னிட்டு இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற வேண்டி இரங்கல் தந்திச்செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்ட் 4, திங்கள்கிழமை அனுப்பப்பட்ட திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் இரங்கல் தந்திச்செய்தியானது திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு, ஏமனின் அப்போஸ்தலிக்க நிர்வாகி மற்றும் அரேபிய தீபகற்பத்தின் அப்போஸ்தலிக்க பிரதிநிதியுமாகிய பேரருள்திரு Zakhia El-Kassis அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஏமன் கடற்கரைக் கப்பல் விபத்து காரணமாக ஏற்பட்ட பேரழிவுகரமான உயிரிழப்புகளால் மிகவும் வருத்தமடைவதாகவும், எல்லாம் வல்ல கடவுளின் அன்பான இரக்கத்தில் இறந்த பல புலம்பெயர்ந்தோரை ஒப்படைத்து செபிப்பதாகவும் அவ்விரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள், பேரிடர் மீட்புப்பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்து துயரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய அனைவரின் மீதும், இறைவனின் தெய்வீக ஆற்றலையும், ஆறுதலையும் நம்பிக்கையையும் நாடி செபிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
பேரிடர் நிகழ்ந்த ஏமனின் இக்கடல் பாதையானது, நீண்ட காலமாக மரணப் பாதை என்றும், இடம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பான IOM இன் படி உலகின் மிகவும் ஆபத்தானது என்றும் அறியப்படுகின்றது.
ஆகஸ்ட் 3, ஞாயிறன்று, அப்யான் கடற்கரையில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இக்கப்பல் விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், இதில் சோமாலியர்கள் மற்றும் எத்தியோப்பியர்கள் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லையைக் கடக்க முயற்சிக்கும் நிலையில் இவ்விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சரியாகக் கணக்கிடப்பட முடியாத நிலையில் 76 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஏறக்குறைய 32 பேர் உயிர்பிழைத்துள்ளனர். டஜன் கணக்காணோர் காணாமல் போயுள்ளனர். 157 பேர் இக்கப்பல் விபத்தில் பயணித்துள்ள நிலையில் காணாமல் போனவர்களை தேடுவதற்கான மீட்புப்பணியில் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
