கடவுளை அறியும் அடிப்படையை வழங்கும் நம்பிக்கை, இறையியல்

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சோதனைகளை முறியடிக்கவும் முன்னேறவும் தேவையான அன்பையும் ஆதரவையும் பெறும் முதல் இடம் குடும்பம். - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

நம்பிக்கை, பிறரன்பு ஆகிய இரண்டையும் இணைக்கும் நற்பண்பான எதிர்நோக்கு நமது பூமிக்குரிய பயணத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்றும், நம்பிக்கையும் இறையியலும் கடவுளை அறிந்து கொள்வதற்கான அடிப்படையை வழங்குகின்றன, உண்மை என்பது நாம் அவருடன் அனுபவிக்கும் அன்பின் வாழ்க்கை என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்ட் 5, செவ்வாய்க்கிழமை முதல் 10, ஞாயிறு வரை ஐவரிகோஸ்டில் உள்ள அபிஜான் என்னுமிடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இறையியல், சமூகம் மற்றும் மேய்ப்புப்பணி பற்றிய மூன்றாவது பான் ஆப்ரிக்க கத்தோலிக்க மாநாட்டில் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

எதிர்நோக்கின் நற்பண்புகளால்தான் விண்ணகத்தில் மகிழ்ச்சியின் முழுமையை அடைய விரும்புகிறோம் என்றும், வாழ்க்கையின் துன்பங்களை எதிர்கொள்ளும்போது கடவுளிடம் நெருங்கி வளர இது நம்மைத் தூண்டுகிறது மற்றும் நிலைநிறுத்துகிறது என்றும் நினைவூட்டியுள்ளார் திருத்தந்தை.

ஆப்பிரிக்கா, உலகின் மற்ற பகுதிகளைப் போலவே, குறிப்பிட்ட துயரங்களை எதிர்கொள்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், இந்த சவால்களையும், விஷயங்கள் மாறாது என்ற கருத்தையும் எதிர்கொள்ளும்போது, விரக்தியடையாமல், உலகிற்கு வெளிச்சமாக மலையின் மீது அமைக்கப்பட்ட ஒரு நகரம் இருப்பது போல நாடுகளுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருப்பது திருச்சபையின் பங்கு என்றும் தெரிவித்துள்ளார்.

"ஆபிரிக்காவில் கடவுளின் திருஅவை குடும்பமாக எதிர்நோக்கில் ஒன்றாகப் பயணித்தல்" என்ற கருப்பொருளில் சிறப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இம்மாநாடானது, நாம் ஒவ்வொருவரும் கடவுளுடனான நமது சொந்த தனிப்பட்ட உறவை வளர்க்க அழைக்கப்பட்டாலும், அதே நேரத்தில், நமது திருமுழுக்கு வழியாக நமது விண்ணகத் தந்தையின் மகன்களாகவும் மகள்களாகவும் ஒன்றுபடுகிறோம் என்பதை நினைவுகூரவும் அழைக்கப்படுகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சோதனைகளை முறியடிக்கவும் முன்னேறவும் தேவையான அன்பையும் ஆதரவையும் பெறும் முதல் இடம் குடும்பம்தான் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், இக் காரணத்திற்காக, ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளிலும் பகுதிகளிலும் உள்ள உள்ளூர் தலத்திருஅவைகளின் குடும்பங்களைத் தொடர்ந்து கட்டியெழுப்ப ஊக்கமூட்டினார்.

இறையியல் மற்றும் மேய்ப்புப் பணிக்கு இடையிலான ஒற்றுமையைக் காண்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நாம் நம்புவதை வாழ வேண்டும். கிறிஸ்து நமக்கு உயிரைக் கொடுக்க மட்டுமல்ல, அதை முழுமையாகக் கொடுக்க வந்தார் என்று நமக்குச் சொன்னார். எனவே, திருஅவையின் போதனைகள் எவ்வாறு மக்களின் இதயங்களையும் மனதையும் கடவுளின் உண்மைக்கும் அன்பிற்கும் திறக்க உதவுகின்றன என்பதை நிரூபிக்கும் மேய்ப்புத் திட்டங்களை செயல்படுத்த ஒன்றிணைந்து பணியாற்றுவது நமது கடமை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஆகஸ்ட் 2025, 08:12