திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ   (AFP or licensors)

அமைதி என்பது கடவுள் நம்முடன் இருப்பதற்கான அடையாளம்

கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் நல்லிணக்கம் மற்றும் அமைதியின் கைவினைஞர்களாக மாற அழைக்கப்படுகிறார்கள் - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

மோதல், சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் வளர்ந்து வரும் ஆன்மீக இழப்பு உணர்வின் ஆழமான வடுக்கள் போன்றவற்றை நமது உலகம் தாங்கி நிற்கிறது என்றும், இத்தகைய சவால்களுக்கு மத்தியில், அமைதி என்பது வெறும் மனித சாதனை மட்டுமல்ல, கடவுள் நம்முடன் இருப்பதற்கான அடையாளம் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 18 முதல் 24 வரை ஸ்டாக்ஹோமில் நடைபெற்றுவரும் நூறாவது ஆண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் பங்கேற்றவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

1925 ஆம் ஆண்டில் சிறப்பிக்கப்பட்ட வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்த உலகளாவிய கிறிஸ்தவ மாநாட்டின் நூற்றாண்டு விழா, கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு ஆழமான நிகழ்வான நிசேயாவின் முதல் கிறிஸ்தவ ஒன்றிப்பின் 1700 வது ஆண்டு விழா, போன்றவற்றை சிறப்பிக்கும் 2025- ஆம் ஆண்டிற்கான கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் நல்லிணக்கம் மற்றும் அமைதியின் கைவினைஞர்களாக மாற அழைக்கப்படுகிறார்கள் என்றும், துணிவுடன் பிரிவினையை எதிர்கொள்ளவும், இரக்கத்துடன் அலட்சியத்தை எதிர்கொள்ளவும், காயமடைந்த இடத்தில் குணப்படுத்துதலைக் கொண்டுவரவும் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை

அமைதி, நீதி மற்றும் அனைவரின் நன்மைக்காக உழைக்கவேண்டும் என்றும், எங்கெல்லாம் நற்செயல் ஆற்ற முடியுமோ அங்கெல்லாம் அதனை செய்யவும் அதற்காக செபிக்கவும், ஒன்றிணைந்து பணியாற்றவும், கத்தோலிக்க திருஅவையின் உறுதிப்பாட்டின் அடையாளமாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

1989 - ஆம் ஆண்டில், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் ஸ்வீடந் நாட்டிற்கு திருப்பயணம் செய்த முதல் உரோமானிய திருத்தந்தையாக இருந்தார் என்றும், அந்நிகழ்வானது கத்தோலிக்க-லூத்தரன் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை குறித்தது என்றும் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், அதைத் தொடர்ந்து 2016- ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின் கூட்டு நினைவானது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் லூத்தரன் தலைவர்களுடன் நடைபெற்றது என்றும் நினைவுகூர்ந்தார்.

நமது பொதுவான திருமுழுக்கு மற்றும் உலகில் நமது பகிரப்பட்ட பணியை அடிப்படையாகக் கொண்ட, தாழ்மையான மற்றும் அன்பான சகோதரத்துவத்தில் உரையாடலுக்கு இரண்டாம் வத்திக்கான் சங்கம் நம்மை அழைத்தது என்றும், கிறிஸ்து தனது திருஅவைக்காக விரும்பும் ஒற்றுமை காணக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஆகஸ்ட் 2025, 09:50