Mentorella அன்னை மரியா திருஉருவத்தின் முன் திருத்தந்தை Mentorella அன்னை மரியா திருஉருவத்தின் முன் திருத்தந்தை   (ANSA)

மெந்தோரெல்லா அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தை

ஏறக்குறைய 170 ஆண்டுகளாக அன்னை மரியா திருத்தலத்தைப் பராமரித்து வழிநடத்தி வரும், போலந்தின் மீட்பர் சபை அருள்பணியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை அவர்கள், அருளின் அன்னை மரியா திருஉருவத்தின் முன் நின்று செபித்து அன்னையின் பாதத்தில் உலக அமைதிக்காக மெழுகுதிரி ஏற்றி செபித்தார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திவோலி மறைமாவட்டத்தில் உள்ள பலெஸ்திரினாவின் மெந்தோரெல்லா அருளின் அன்னை மரியா திருத்தலத்திற்குச் சென்று உலக அமைதிக்காக மெழுகுதிரி ஏற்றி செபித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 19, செவ்வாய் மாலை தனது கோடை விடுமுறையை முடித்து வத்திக்கான் திரும்பும் முன் குவதாங்ஞோலோ என்னும் சிற்றூரில் உள்ள திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களுக்கு மிகவும் பிரியமான மெந்தோரெல்லா அன்னை மரியா திருத்தலம் சென்று செபித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஏறக்குறைய 170 ஆண்டுகளாக இத்திருத்தலத்தைப் பராமரித்து வழிநடத்தி வரும், போலந்தின் மீட்பர் சபை அருள்பணியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை அவர்கள், அருளின் அன்னை மரியா திருஉருவத்தின் முன் நின்று செபித்து அன்னையின் பாதத்தில் உலக அமைதிக்காக மெழுகுதிரி ஏற்றி செபித்தார்.

திருத்தந்தையின் வருகை குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு பதிலளித்த திருத்தல அதிபர்தந்தை, அருள்தந்தை Adam Dzwigon அவர்கள், "இது மிகவும் வரவேற்கத்தக்க மற்றும் எதிர்பாராத வருகையாக இருந்தது என்றும், எளிமை, தந்தைக்குரிய உணர்வு மற்றும் சகோதரத்துவ உணர்வு நிறைந்ததாக இருந்தது என்றும் பகிர்ந்துகொண்டார்.

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் II மற்றும் திருத்தந்தை எட்டாம் இன்னசென்ட் உட்பட திருத்தந்தையர்கள் இத்திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளதாக எடுத்துரைத்த அருள்பணி ஆதம் அவர்கள், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் இவ்விடத்திற்குப் பலமுறை வருகை தந்திருக்கின்றார் என்றும் கூறினார்.  

1830-1831 இரஷ்ய ஆட்சிக்கு எதிரான எழுச்சி தோல்வி அடைந்த பின், பிரான்சுக்கு வந்த நாடுகடத்தப்பட்ட மற்றும்  புலம்பெயர்ந்த பல போலந்து மக்களுக்கு மறைப்பணி ஆற்றுவதற்காக உருவாக்கப்பட்டது போலந்தின் மீட்பர் சபை. தற்போது இச்சபையைச் சார்ந்தவர்கள் தலத்திருஅவைப்பணி மற்றும் கல்விப்பணிக்காகத் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 ஆகஸ்ட் 2025, 14:26