திருத்தந்தை 14-ஆம் லியோ திருத்தந்தை 14-ஆம் லியோ   (AFP or licensors)

உலக அமைதிக்காக அழைப்பு விடுக்கும் திருத்தந்தை

உண்மையான மன்னிப்பு மனந்திரும்புதலுக்காக காத்திருக்காது, அது முதலில் வழங்கப்படுகிறது ; மன்னிப்பது என்பது தீமையை மறுப்பது அல்ல; அது மேலும் தீமையை உண்டாக்குவதைத் தடுப்பதே - திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

பிரிவினை மற்றும் பழிவாங்கும் மனப்பான்மையை விட்டு விலகி, இதயங்களை வெறுப்பிலிருந்து விடுதலையாக்குவோம் என்றும்,  பொது நலனின் அடிப்படையில் உருவாகும் முழுமையான பார்வை நம்மில் நிலைநிறுத்தப்படட்டும் என்று தனது X வலை  தள பக்கத்தில் அமைதிக்கான வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஆகஸ்ட் 22 ,வெள்ளிக்கிழமை அரசியான தூய கன்னி மரியா திருநாளின் போது, தனது  X வலை தள பக்கத்தில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, தொடர்  வன்முறையால் காயப்பட்ட இவ்வுலகம் அமைதி பெற நோன்பிருந்து இறைவேண்டல் செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது துண்டு துண்டாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் 3-ஆம் உலகப் போரினால், உலகம் சிதைந்து கொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ள  திருத்தந்தை, மன்னிப்பு இல்லாமல் அமைதி ஒருபோதும் வராது என்ற மாற்றுப்பார்வையை இவ்வுலகம் பெறவேண்டுமெனவும்  தெரிவித்துள்ளார்.

மேலும், உண்மையான மன்னிப்பு மனந்திரும்புதலுக்காக  காத்திருக்காது, அது முதலில் வழங்கப்படுகிறது என்றும்  மேலும், மன்னிப்பது என்பது தீமையை மறுப்பது அல்ல;  அது மேலும் தீமையை உண்டாக்குவதைத் தடுப்பதே என்றும்  வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

திருத்தந்தையின் அமைதிக்கான அழைப்பை ஏற்று, இத்தாலி, ஸ்பெயின், இலத்தீன் அமெரிக்கா, ஆசியா, அரேபிய தீபகற்பம், புனிதபூமி, உள்ளிட்ட பல இடங்களில் ஆயர்கள், மறைமாவட்டங்கள், தலத் திருஅவை இயக்கங்கள் இணைந்து நோன்பிருந்து இறைவேண்டலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஆகஸ்ட் 2025, 12:05