வானூர்தி விபத்தில் இறந்தோருக்கு மலரஞ்சலி வானூர்தி விபத்தில் இறந்தோருக்கு மலரஞ்சலி   (ANSA)

கானாவில் வானூர்தி விபத்தில் இறந்தோருக்கு இரங்கல் செய்தி

சட்டவிரோத சுரங்கத்தை நிறுத்துவது தொடர்பான நிகழ்விற்காக ஒபுவாசி நகரத்திற்குச் சென்று கொண்டிருந்த கானாவின் அரசு அதிகாரிகள், 3 விமான பணியாளர்கள் மற்றும் பயணிகள் சிலரை ஏற்றிச் சென்ற இராணுவ வானூர்தி, மத்திய அஷாந்தி பகுதியின் அடர்ந்த காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளானது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் இராணுவ வானூர்தி விபத்தில் உயிரிழந்த அரசு அதிகாரிகள் மற்றும் பயணிகளின் ஆன்மா இறைவனில் இளைப்பாற  வேண்டி இரங்கல் தந்திச்செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார்  திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஆகஸ்ட் 6, புதனன்று அனுப்பப்பட்ட திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் இரங்கல் தந்திச்செய்தியானது, திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு, கானா கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், சுயானி மறைமாவட்டத்தின் ஆயருமான மேத்யூ கே.கியாம்ஃபி அவர்களுக்கு   அனுப்பப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின்  ஆன்மாக்களை எல்லாம் வல்ல இறைவனின் இரக்கத்தில்  ஒப்படைப்பதாகவும், பிரிவால் வருந்தும் அவர்களின் குடும்பத்தினருக்கும், அந்நாட்டு மக்களுக்கும்  தனது ஆன்மிக நெருக்கத்தையும், இறைவேண்டல்களையும் உறுதியளிப்பதாகவும்  அவ்விரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

சட்டவிரோத சுரங்கத்தை நிறுத்துவது தொடர்பான நிகழ்விற்காக  ஒபுவாசி நகரத்திற்குச் சென்று கொண்டிருந்த கானாவின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா, சுற்றுச்சூழல் அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முகமது உள்பட 3 விமான பணியாளர்கள் மற்றும் பயணிகள் சிலரை  ஏற்றிச் சென்ற வானூர்தி, மத்திய அஷாந்தி பகுதியின்  அடர்ந்த காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், அவர்களின் மரணம், அவர்களின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மட்டுமல்ல, நாட்டிற்கும்  மிகப்பெரும் இழப்பாகும் என்று கவலைத் தெரிவித்துள்ளதுடன், திறமையான ஆளுமைகளை ஒரே நேரத்தில் இழந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றும் கானாவின் ஆயர் பேரவை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கானாவின் அரசுத் தலைவர் ஜான் டிராமணி மஹாமா, அந்நாடு முழுவதும் மூன்று நாள்கள் துக்கத்தை அனுசரிக்கும்படி அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஆகஸ்ட் 2025, 14:12