அழியா அடையாளத்தை ஏற்படுத்தும் திருத்தந்தையின் சந்திப்பு
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
ஆகஸ்ட் 7, வியாழனன்று, வெனிஸ் நகரின் தூய மேரி மேஜர் சிறைச்சாலையில் உள்ள மூன்று கைதிகளை, அந்நகரின் திருப்பயணக் குழுவோடு சந்தித்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
திருப்பயணமும், திருத்தந்தையுடன் நடந்த சந்திப்பும் கைதிகளின் ஆன்மா, வாழ்க்கை மற்றும் வரலாற்றிலும், அவர்களுடன் பயணித்த ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் மனதிலும், சிறைக்கைதிகளை சமூக வாழ்வில் மீண்டும் இணைக்கும் மறைமாவட்டப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவரின் மனதிலும், அழியாத அடையாளத்தை விட்டுச் செல்லும் என்று வெனிஸ் முதுபெரும் தந்தை பேராயர் மொராலியா தெரிவித்துள்ளார்.
யூபிலி திருப்பயணமும், திருத்தந்தையைச் சந்திக்கும் வாய்ப்பும், வெனிஸ் உயர் மறைமாவட்டத்தின் சிறைக்கைதிகளுக்கான ஆன்மிக பராமரிப்பின் தொடர்ச்சியான மற்றும் முழுமையான அர்ப்பணிப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும் உரைத்துள்ளார் பேராயர் மொராலியா.
ஏறக்குறைய 500 கிலோமீட்டர் நீளம் கொண்ட யூபிலி திருப்பயணத்தின் இறுதி 100 கிலோமீட்டரை, இத்தாலிய நகரமான தெர்னியிலிருந்து உரோமை நகர் வரை நடைபயணம் மேற்கொண்ட இத்திருப்பயணிகள், வெனிஸ் நகரின் முதுபெரும் தந்தை பேராயர் பிரான்செஸ்கோ மொராலியா, சிறைக்கூடத் தலைவர் அருள்பணியாளர். மாஸ்ஸிமோ காதாமூரோ மற்றும் மறைமாவட்ட அதிகாரிகளுடன் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களைச் சந்தித்தனர்.
திருத்தந்தையுடனான இந்த சந்திப்பு, நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தங்களின் திருப்பயண அனுபவத்தை உண்மையாக நிறைவு செய்யும் ஒரு நிகழ்வு என்று தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் காதாமூரோ.
மேலும், அச்சிறைக்கைதிகள், ஆன்மிக அர்த்தம் கொண்ட இத்திருப்பயணத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றது பெருமை அளிப்பதாக தூய மேரி மேஜர் சிறைச்சாலை இயக்குநர் என்ரிக்கோ பாரினா அவர்கள் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
