திருத்தந்தையுடன் புகைப்படம் எடுத்த அருள்பணி Pawel Nowak திருத்தந்தையுடன் புகைப்படம் எடுத்த அருள்பணி Pawel Nowak  

ஜெர்மனி முதல் உரோம் வரை மிதிவண்டிப் பயணம்

மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகள் தூக்கமின்றி மிதிவண்டியில் பயணித்து உரோம் நகருக்கு வந்திருக்கும் அருள்பணி Pawel Nowak அவர்கள், லோவென்ஹெர்ஸ் குழந்தை மருத்துவமனையை ஆதரிப்பதற்காக நிதி திரட்டுவதைத் தனது முயற்சியின் நோக்கமாகக் கொண்டவர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

குணப்படுத்த முடியாத நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஜெர்மனியில் இருந்து உரோமிற்கு மிதிவண்டியில் பயணம் செய்த அருள்பணி Pawel Nowak பொது மறைக்கல்வி உரையின் இறுதியில் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களைச் சந்தித்தார்.

ஆகஸ்டு 6, புதனன்று திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களை பொதுமறைக்கல்வி உரையின் நிறைவில் சந்தித்து தனது பயணத்தின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார் அருள்பணி Pawel Nowak.

ஜெர்மனியின் Syke நகரில் உள்ள Löwenherz என்னும் இடத்தில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவமனைக்காக நிதி திரட்டுவதற்காக ஜெர்மனியில் இருந்து உரோம் வரை மிதிவண்டியில் ஏறக்குறைய 1,600 கிமீ தூரம் பயணம் செய்துள்ளார் அருள்பணி Pawel Nowak.

குணப்படுத்தப்பட முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக அம்மருத்துவமனைக்கு நிதி திரட்டும் அருள்பணி Pawel Nowak அவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் மருத்துவ உதவிக்காக நிதி வேண்டி ஆஸ்திரியாவிற்கு தனது அடுத்த மிதிவண்டிப் பயணத்தைத் தொடங்க இருப்பதாகக்  வத்திக்கான் செய்திகளிடம் பகிர்ந்து கொண்டார்.

மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகள் தூக்கமின்றி மிதிவண்டியில் பயணித்து உரோம் நகருக்கு வந்திருக்கும் அருள்பணி Pawel Nowak அவர்கள், லோவென்ஹெர்ஸ் குழந்தை மருத்துவமனையை ஆதரிப்பதற்காக நிதி திரட்டுவதைத் தனது முயற்சியின் நோக்கமாகக் கொண்டவர். அதற்கேற்றவாறு அவர் உரோம் நகருக்கு வந்தவுடன், 7,000 யூரோக்கள் நன்கொடையாகப் பெற்றார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து பொது மறைக்கல்வி உரைக் கூட்டத்திற்குப் பிறகு, அவரது கைகுலுக்கி அவருடன் சில வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ள முடிந்தது என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார் அருள்பணி நோவாக்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஆகஸ்ட் 2025, 13:09