கர்தினால் Estanislao Karlic கர்தினால் Estanislao Karlic 

தன்னலமற்ற, நேர்மையான போதகர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் கார்லிக்

கோர்டோபா மற்றும் பரானா உயர்மறைமாவட்டங்களில் அருள்பணியாளராகவும் ஆயராகவும் பணியாற்றியவர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் கார்லிக்

மெரினா ராஜ் – வத்திக்கான்

பல ஆண்டுகளாக மிகுந்த நம்பிக்கையுடன், கடவுள் மற்றும் திருஅவையின் பணிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மறைந்த கர்தினால் ஸ்தனிஸ்லாவ் எஸ்ட்பன் கார்லிக் என்றும், வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நற்செய்தியின் ஒளியைக் கொண்டு வந்த தன்னலமற்ற,  நேர்மையான போதகர் என்றும் இரங்கல் தந்திச்செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 8, வெள்ளிக்கிழமையன்று இறைபதம் சேர்ந்த தூய அகுஸ்தீன் சபையைச் சார்ந்தவரும் அர்ஜெண்டினாவின் பரானா உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயருமான கர்தினால் ஸ்தனிஸ்லாவ் எஸ்ட்பன் கார்லிக் (Estanislao Esteban Karlic) அவர்களின் மறைவை முன்னிட்டு பரானா உயர் மறைமாவட்ட பேராயர் RAÚL MARTÍN அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

கோர்தோபா மற்றும் பரானா உயர்மறைமாவட்டங்களில் அருள்பணியாளராகவும் ஆயராகவும் பணியாற்றியவர் கர்தினால் கார்லிக் என்றும், தொடர்ச்சியாக இரண்டு முறை அர்ஜெண்டினாவின் ஆயர் பேரவைத் தலைவராகவும் இருந்தார் என்றும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் திருத்தூதுப்பயணத்தின்போது அவரை வரவேற்றவர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

உள்ளூர், தேசிய மற்றும் கண்டங்கள் அளவில் பல பிற ஆயர் பணிகள் மற்றும் முன்முயற்சிகளுடன், கத்தோலிக்க திருஅவையின் மதச்சார்பின்மையை உருவாக்குவதில் ஒத்துழைப்பாளர்களில் ஒருவராக, உலகளாவிய திருஅவைக்கு தனது பணிகளைத் தாராளமாக வழங்கினார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

கடவுள் மீதான நம்பிக்கை வாழ்க்கைக்காகவும், திருஅவையின் மீதான அவரது ஆழ்ந்த அன்புக்காகவும் நன்றி செலுத்தி, அவரது ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற செபிப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஆகஸ்ட் 2025, 11:33