அமேசான் ஆயர் பேரவையில் பங்கேற்றோர் அமேசான் ஆயர் பேரவையில் பங்கேற்றோர் 

மேய்ப்புப்பணியினை நிறைவேற்ற உறுதியான வழிகளைத் தேட வேண்டும்

அனைத்தையும் கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்கேற்ப அமேசான் மக்களிடையே தெளிவுடனும் மகத்தான அன்புடனும் கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கப்படுவது அவசியம் - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

அனைத்து மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கும் திருஅவையின் பணி, அங்கு வாழும் மக்களை சமமாக நடத்துதல் மற்றும் நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரித்தல் ஆகியவற்றில் அமேசான் மறைமாவட்ட ஆயர்கள் தங்களது பணியினை நிறைவேற்ற உறுதியான மற்றும் திறன்மிக்க வழிகளை தேட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 18, திங்கள் அன்று அனுப்பியுள்ள வாழ்த்துத் தந்திச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், படைப்பாளரின் நன்மையையும், அழகையும் பற்றி பேசும் இயற்கை பொருட்களை யாரும் பொறுப்பற்ற முறையில் அழிக்கவோ பாதிப்படையச் செய்யவோ கூடாது மாறாக போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 17 முதல் 20 வரை போகோடாவில் நடைபெறும் அமேசான் ஆயர் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் வாழ்த்து தந்திச்செய்தியானது திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்கேற்ப அமேசான் மக்களிடையே தெளிவுடனும் மகத்தான அன்புடனும் கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கப்படுவது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், இதனால் அவர்களுக்கு நற்செய்தியின் புதிய மற்றும் தூய்மையான அப்பத்தையும், நற்கருணையின் விண்ணக ஊட்டச்சத்தையும் வழங்குவதற்கு நாம் நம்மையே அர்ப்பணிக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே உண்மையிலேயே கடவுளின் மக்களாகவும் கிறிஸ்துவின் உடலாகவும் இருப்பதற்கான ஒரே வழி என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், இந்தப் பணியில், திருஅவையின் வரலாற்றால் உறுதிப்படுத்தப்பட்ட ஆற்றலால் நாம் இயக்கப்படுகிறோம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

கிறிஸ்துவின் பெயர் அறிவிக்கப்படும் இடத்தில், அநீதி பின்வாங்குகிறது, ஏனெனில், திருத்தூதர் பவுல் கூறுவதுபோல், நாம் ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளாக வரவேற்க முடிந்தால், மனிதனால் மனிதனைச் சுரண்டுவது அனைத்தும் மறைந்துவிடும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், தந்தைக் கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள பொதுவான இல்லத்தைப் பராமரிப்பதற்கான உரிமையும் கடமையும் கடவுளைப் புகழ்ந்து, நம் ஆன்மாக்களின் மீட்பைப் பெறுவதற்கான நமது இலக்கை அடைய நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 ஆகஸ்ட் 2025, 10:27