17-ஆவது பன்னாட்டு அறநெறி இறையியல் மாநாட்டின் பங்கேற்பாளர்கள் 17-ஆவது பன்னாட்டு அறநெறி இறையியல் மாநாட்டின் பங்கேற்பாளர்கள் 

கடவுளது எல்லையற்ற இரக்கத்தின் புலப்படும் அடையாளம் புனித அல்போன்ஸ் மரியா தே லிகோரி

புனித அல்போன்ஸ் மரியா தே லிகோரி போன்ற புனிதர்களின் ஞானமுள்ள மற்றும் எப்போதும் பொருத்தமான முன்மாதிரியைப் பின்பற்றுவதன் வழியாக உலகின் பிரச்சினைகளைத் தீர்க்க அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தனது உடன் சகோதரர்கள் மீது அன்பு கொண்டு பிறரன்பு பணிகள் ஆற்றி, புரிதல் மற்றும் பொறுமை உணர்வுடன் அவர்களை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர் புனித அல்போன்ஸ் மரியா தே லிகோரி என்றும், கடவுளின் எல்லையற்ற இரக்கத்தின் ஒரு புலப்படும் அடையாளமாக அவர் மாறினார் என்றும் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 20, புதன் மற்றும் 21, வியாழன் ஆகிய நாள்களில் கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 17-ஆவது பன்னாட்டு அறநெறி இறையியல் மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து தந்திச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

திருத்தந்தை அவர்களின் வாழ்த்துச்செய்தியானது திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திடப்பட்டு பொகோட்டோவின் தூய அல்போன்ஸ் பல்கலைக்கழகத்தின் அதிபர் தந்தை அருள்பணி P. OSCAR BÁEZ PINTO, C.SS.R. அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பன்னாட்டு அறநெறி இறையியல் மாநாட்டின் அமைப்பாளர்களையும் பங்கேற்பாளர்களையும் மனதார வாழ்த்தியுள்ள திருத்தந்தை அவர்கள், இம்மாநாட்டின் இந்நாள்கள் தற்போதைய சவால்கள், மாற்றங்கள் மற்றும் மோதல்களைப் பிரதிபலிக்க ஒரு சாதகமான வாய்ப்பாக இருப்பதாகவும், இயேசு கிறிஸ்துவில் அவர்களின் முழுமையைக் கண்டறியும் என்று நம்புவதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இறைச்சட்டத்தின் தேவைகள், மனிதனின் மனசாட்சி, சுதந்திர இயக்கவியல் போன்றவற்றிற்கு இடையில் ஒரு சமநிலையைக் கண்டுபிடித்த புனித அல்போன்ஸ் மரியா தே லிகோரி போன்ற புனிதர்களின் ஞானமுள்ள மற்றும் எப்போதும் பொருத்தமான முன்மாதிரியைப் பின்பற்றுவதன் வழியாக உலகின் பிரச்சினைகளைத் தீர்க்க அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

இக்கூட்டம் நன்முறையில் நடைபெற ஞானத்தின் இருப்பிடமான தூய அன்னை மரியாவின் பரிந்துரையை நாடி செபிப்பதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், இம்மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி இவ்வாழ்த்துச்செய்தியினை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஆகஸ்ட் 2025, 11:40