அல்ஜீரியாவின் திபிரினின் துறவிகள் அல்ஜீரியாவின் திபிரினின் துறவிகள் 

அல்ஜீரிய மறைசாட்சிகளின் சான்று வாழ்வு

மறைபரப்புப்பணி என்பது ஒருபோதும் “தன்னை வெளிப்படுத்தும் மேடையோ அல்லது அடையாளங்களை எதிர்த்து நிற்கும் முயற்சியோ அல்ல; அது, தன்னை முழுமையாக அர்ப்பணித்து,இன்பம் துன்பம் என அனைத்து சூழ்நிலையிலும் இயேசுவையே ஆண்டவராக வணங்கும் நிலை - திருத்தந்தை 14-ஆம் லியோ

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

எளிமையின் பாதையே, உண்மையான மறைபரப்புப் பணியின் பாதை என்று, ரிமினியாவில் நடைபெறும்  மக்களின் நட்புறவிற்கான கூட்டத்திற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

மறைபரப்புப்பணி  என்பது ஒருபோதும் தன்னை வெளிப்படுத்தும் மேடையோ  அல்லது அடையாளங்களை எதிர்த்து நிற்கும் முயற்சியும் அல்ல; அது, தன்னை முழுமையாக அர்ப்பணித்து, இன்பம் துன்பம் என அனைத்து சூழ்நிலையிலும்   இயேசுவையே ஆண்டவராக வணங்கும் நிலை ஆகும் என்று திருத்தந்தை கூறியதாக  அக்கூட்டத்தில் கலந்துகொண்ட வத்திக்கான் சமூகத்தொடர்புத் துறையின் செய்திப்பிரிவு இயக்குனர் அந்த்ரேயா தொர்னெல்லி அவர்கள் தெரிவித்துள்ளார்.

உடன்பிறந்த உணர்வு,நட்புணர்வு ஆகியவற்றின் சாட்சியமாக, அல்ஜீரியாவின் மறைசாட்சிகள் மக்களுக்காகத் தங்கள் வாழ்வையே எவ்வாறு தியாகம் செய்தார்கள்   என்பதை  மறைசாட்சிகளின் கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது என்றும், அம்மறைச்சாட்சிகள் தங்களை முன்னிலைப்  படுத்தாமல் எளிய சாட்சிகளாக திகழ்ந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

"சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவுக்காவே நாங்கள் இருக்கிறோம்; ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளால் மீண்டும் மீண்டும் சிலுவையில் அறையப்பட்டுத் துன்புறும் இயேசுவின் காரணமாகவே  நாங்கள் இருக்கிறோம்; திருஅவை சிலுவையருகில் இல்லாமல், உலகியலான ஆற்றல், அரசியல், பொருளாதாரம்  அல்லது மேடைக் காட்சிகளில் நம்பிக்கை வைக்கும் போது அது உயிரற்றதாகிவிடுகிறது; இறைவார்த்தை  ஒளிர்வது தன் ஒளியால் அல்ல; மாறாக கிறிஸ்துவின் ஒளியை பிரதிபலிப்பதால்தான்" என்று 1996-ஆம் ஆண்டு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்படுவதற்கு முன்,  மறைசாட்சியான  ஆயர் பியர் கிளாவெரி தனது மறையுரையில் கூறியதையும் திருத்தந்தை தனது செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும், அல்ஜீரிய மறைசாட்சிகளின் தியாகம் நிறைந்த சாட்சிய வாழ்வு, இறைவார்த்தையின் சாரத்தை நினைவூட்டும் சவாலும் அடையாளமும் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை .

இறுதியாக, தாழ்மையானவர்களையும்,எளியவர்களையுமே இறைவன் தேர்ந்தெடுக்கிறார் என்றும்,அவ்வாறே கடவுள் , கன்னி மரியாவின் கருவறையிலே  நம் வரலாறான தம் கதையை எழுதினார் என்றும் முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டியுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஆகஸ்ட் 2025, 13:36