திருத்தந்தை பதினான்காம் லியோ. திருத்தந்தை பதினான்காம் லியோ.   (AFP or licensors)

15 வயது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனைச் சந்தித்த திருத்தந்தை

லிம்போமா அதாவது நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் அல்லது லிம்போசைட்டுகள் எனப்படும் இரத்த அணுக்களை பாதிக்கும் ஒரு வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இக்னாசியோ உரோம் குழந்தை இயேசு மருத்துவமனையில் தீவிர மருத்துவ சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆகஸ்ட் 4, திங்கள் கிழமை மாலை உரோமில் உள்ள குழந்தை இயேசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 15 வது இக்னாசியோ (Ignacio Gonzálvez)  என்னும் இஸ்பெயின் நாட்டைச் சார்ந்த சிறுவனையும் அவனது குடும்பத்தாரையும் சந்தித்து அவர்களுக்காக செபித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இளைஞர்களுக்கான யூபிலியில் பங்கேற்பதற்காக இஸ்பெயினில் இருந்து வந்திருந்த Ignacio Gonzálvez உடல் நலமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் வழங்கிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், மருத்துவமனையின் புற்றுநோய்ப்பிரிவில் இருந்த நோயாளர்கள் சிலரையும் சந்தித்தார்.

இக்னாசியோவின் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் என அனைவரையும் சந்தித்து உரையாடிய திருத்தந்தை, விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்தினை அனைவருடனும் இணைந்து செபித்து, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அவர்களுக்கு வழங்கினார்.

இக்னாசியோவின் பெற்றோர் முர்சியாவைச் சேர்ந்த பியத்ரோ பாப்லோ மற்றும் கார்மென் குளோரியா கோன்சால்வெஸ் ஆவர். லிம்போமா அதாவது  நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் அல்லது லிம்போசைட்டுகள் எனப்படும் இரத்த அணுக்களை பாதிக்கும் ஒரு வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இக்னாசியோ உரோம் குழந்தை இயேசு மருத்துவமனையில் தீவிர மருத்துவ சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

திருத்தந்தை தனது குடும்பத்தைச் சந்தித்த நிகழ்வு பற்றி வத்திக்கான் செய்திகளுடன் தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட தாய் குளோரியா, "கடவுள் எங்களைக் கைவிடவில்லை என்பதற்கான அடையாளமாக திருத்தந்தையின் சந்திப்பைக் கருதுவதாகத் தெரிவித்தார்.

மேலும் நாம் அனைவரும் “விண்ணகத்திற்காகப் படைக்கப்பட்டவர்கள்" என்ற திருத்தந்தையின் கருத்து தன்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்ததாக தந்தை பியத்ரோ கூறினார். எங்களது குடும்பத்தின் துயரத்தை உணர்ந்து புரிந்துகொண்ட திருத்தந்தையின் செயல் மிகுந்த பலமளிக்கின்றது என்றும் எடுத்துரைத்தனர் பெற்றோர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஆகஸ்ட் 2025, 12:05