Knights of Columbus உறுப்பினர்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்து
ஜெர்சிலின் டிக்ரோஸ் வத்திக்கான்
துன்புறும் மக்களுக்கு நீங்கள் ஆற்றிவரும் சேவை அம்மக்களுக்கு பல நலன்களையும், நம்பிக்கையையும் வழங்குகிறது என்று வாஷின்டனில் நடைபெறும் Knights of Columbus எனப்படும் உலகளாவிய கத்தோலிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 143-வது மாநாட்டிற்கு திருத்தந்தை 14-ஆம் லியோ வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
“எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நாம் அறியாதிருந்தாலும், நல்லவற்றையே எதிர்பார்த்து வாழ்கிறோம்” என்ற முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, எதிர்நோக்கின் இந்த யூபிலி ஆண்டில் திருஅவை மற்றும் உலகம் முழுவதையும், மிக முக்கியத் தேவையான நம்பிக்கையைப் பற்றி சிந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
கத்தோலிக்கர்களாகிய நம்அனைவருடைய நம்பிக்கையின் ஆதாரம் கிறிஸ்துவே என்பதை நாம் நன்கறிவோம் என்றும், உலகம் முழுவதும் நற்செய்தியை அறிவிக்க, ஒவ்வொரு கால கட்டத்திலும் கிறிஸ்து அவருடைய சீடர்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறார் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருஅவை எப்போதும் குறிப்பாக, துன்புறும் மக்களுக்கு உறுதியான நம்பிக்கையின் அடையாளமாக திகழ அழைக்கப்பட்டுள்ளதாகவும் திருத்தந்தை தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையின் செய்தியை நன்கு புரிந்து கொண்ட Knights of Columbus என்னும் உலகளாவிய கத்தோலிக்க தொண்டு அமைப்பின் நிறுவனர் அருளாளர் Michael McGivney அவர்கள், ஏழைகளுக்கும், புலம்பெயர்ந்தோருக்கும், துன்புருவோருக்கும், உதவிகள் செய்து ஆறுதல் அளித்துள்ளார் என்றும், அவ்வுதவிகள் இன்றுவரை தொடர்ந்து வருகிறது என்றும் பாராட்டியுள்ளார் திருத்தந்தை.
நம்பிக்கையின் அறிவிப்பாளர்கள் என்னும் இக்கூட்டமைப்பின் கருப்பொருள் உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும், தலத் திருஅவைகளிலும், குடும்பங்களிலும் நம்பிக்கையின் அடையாளங்களாக வாழ அழைப்பு விடுக்கிறது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இறுதியாக, அக்கூட்டமைப்பின் அங்கத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவர்களின் முயற்சிகள் அனைத்தையும் அன்னை கன்னி மரியாவின் பரிந்துரையிலும், அருளாளர் Michael McGivney பரிந்துரையிலும் ஒப்படைத்து தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கி செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
