மனித உடன்பிறந்த உணர்வு குறித்த உலகளாவியக் கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் உடன் திருத்தந்தை மனித உடன்பிறந்த உணர்வு குறித்த உலகளாவியக் கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் உடன் திருத்தந்தை  (ANSA)

ஒவ்வொருவரையும் சகோதர சகோதரிகளாக அடையாளம் காண....

உடன்பிறந்த உணர்வு என்பது உடனிருப்பிற்கான மிகவும் உண்மையான பெயர், இதன் பொருள் மற்றவரின் முகத்தை மீண்டும் கண்டுபிடிப்பது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மனித உடன்பிறந்த உணர்வுக்கான உலகளாவியக் கூட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கான இருப்பு கலாச்சாரங்களையும் மதங்களையும் ஒன்றிணைக்கும் ஞானத்திற்கு சான்றளிக்கிறது என்றும், நமது அனைத்து வேறுபாடுகளையும் மீறி, ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளாக அடையாளம் காண உதவும் அமைதியான ஆற்றலாக விளங்குகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 12, வெள்ளியன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் மனித உடன்பிறந்த உணர்வு குறித்த உலகளாவியக் கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 350 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.   

உடன்பிறந்த உணர்வு என்பது உடனிருப்பிற்கான மிகவும் உண்மையான பெயர் என்றும், இதன் பொருள் மற்றவரின் முகத்தை மீண்டும் கண்டுபிடிப்பது என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இதனை நம்புபவர்கள், ஏழைகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் பகைவரின் முகத்தில் கடவுளின் உருவம் வெளிப்படுகின்றது என்னும் மறைபொருளை அடையாளம் காண்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

உன் சகோதரன் ஆபேல் எங்கே என்று கடவுள் காயீனை நோக்கிக் கேட்ட கேள்வியானது, போரின் வன்முறையால் அவதிப்படுபவர்களிடமும், தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களைக் குறித்து நம்மிடம் கேட்கப்படும் கேள்வி என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

உலக மக்களால் ஓரங்கட்டப்பட்டு, நிராகரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரிடமும், வறுமையின் சுமையைச் சுமப்பவர்களிடமும் நாம் மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அக்கறை, தாராள மனப்பான்மை மற்றும் நல்லிணக்க நம்பிக்கையுடன் போர் வணிகத்தை எதிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

புதிய வகையான சமூக தொண்டு, பல்வேறு பகுதிகளுக்கு இடையிலான கூட்டணிகள் மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான ஒற்றுமையை வளர்ப்பதற்கான உள்ளூர் மற்றும் பன்னாட்டு வழிகளை நாம் அடையாளம் காணவேண்டும் என்றும், இவை சமூக அடிப்படையிலான அணுகுமுறைகளாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

கவனிப்பு, பரிசு, நம்பிக்கை ஆகியவை ஓய்வு நேரத்தில் மட்டுமே கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகள் அல்ல என்றும், அவை வாழ்க்கையில் பங்கேற்பை ஆழமாக்குகின்ற, விரிவுபடுத்துகின்ற பொருளாதாரத்தின் தூண்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

கலாச்சாரம், பணி உறவுகள் மற்றும் அரசியல் நடவடிக்கை வழியாக உடன்பிறந்த உணர்வுக்கான ஆன்மிகத்தை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும், “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். என்ற யோவான் நற்செய்தியில் இயேசு கூறும் வார்த்தைகளை எப்போதும் உங்கள் இதயங்களில் சுமந்து செல்லுங்கள் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 செப்டம்பர் 2025, 16:09