மறைக்கல்வி என்பது பயண வழிகாட்டி புத்தகம்

கடவுள் நம் மீட்பிற்காக தன் உயிரைக் கையளித்ததன் வாயிலாக உலகை எல்லாத் தீமைகளிலிருந்தும் மீட்டுக்கொள்கின்றார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மறைக்கல்வி என்பது தனித்துவம் மற்றும் முரண்பாடுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் பயண வழிகாட்டி புத்தகம் என்றும், இது முழு கத்தோலிக்க திருஅவையின் நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 28, ஞாயிறு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலி திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் கேள்விகளைக் கேட்டல், போராட்டங்களில் பங்கேற்றல், மனித மனசாட்சியில் வாழும் நீதி மற்றும் உண்மைக்கான விருப்பத்திற்குப் பணியாற்றுதல் போன்றவற்றின் வழியாக திருஅவையின் மேய்ப்புப்பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

கடவுள், மக்களின் இதயங்களைப் பார்க்கிறார், அவருடைய கண்கள் வழியாக, தேவையில் இருப்பவர் மற்றும் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் ஆகியோரை நாம் அடையாளம் காண முடியும் என்றும்,  நற்செய்தியில் இயேசு எடுத்துரைக்கும் செல்வந்தர் இலாசர் உவமைக் கதையானது இக்காலச்சூழலையும் எடுத்துரைக்கின்றது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

நூற்றாண்டுகள் பல கடந்தாலும் சூழல் இன்றும் மாறாது அப்படியே இருக்கின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், செல்வத்தின் வாசலில், போர் மற்றும் சுரண்டலால் சூறையாடப்பட்ட முழு மக்களின் துயரம் நிற்கிறது என்றும்,  நீதியை மறக்கும் பேராசை, தர்மத்தை மிதிக்கும் இலாபங்கள், ஏழைகளின் துயரைக் கண்டும் காணாமல் இருக்கும் செல்வங்கள் ஆகியவற்றிற்கு முன்பாக எத்தனையோ இலாசர்கள் இறந்துகொண்டிருக்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டானது கொண்டாடப்பட்டக் காலகட்டத்தில் மறைக்கல்வியாளார்களுக்கான யூபிலி நாள் கொண்டாட்டத்தின்போதும் இதே நற்செய்தி பகுதி பற்றி சிந்திக்கப்பட்டது என்பதை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், கடவுள் நம் மீட்பிற்காக தன் உயிரைக் கையளித்ததன் வாயிலாக உலகை எல்லாத் தீமைகளிலிருந்தும் மீட்டுக்கொள்கின்றார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரிகளையும் மேற்கோள் காட்டினார்.

கடவுளது மீட்புப்பணி நமது பணியின் தொடக்கம். ஏனெனில், அது அனைவரின் நன்மைக்காகத் தன்னையே அர்ப்பணிக்க நம்மை அழைக்கின்றது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கடவுளாகிய இயேசு உயிர்த்தெழுந்தார், அவர் நம்மை அன்பு செய்கின்றார், நமக்காக உயிரைக் கொடுத்தார்; உயிர்த்தெழுந்த அவர் உயிருடன் இருக்கிறார், நம் அருகில் இருக்கிறார், ஒவ்வொரு நாளும் நமக்காகக் காத்திருக்கிறார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

திருவிவிலியத்தில் இருக்கக்கூடிய வார்த்தைகள் நமக்கு ஏமாற்றத்தையும் அவநம்பிக்கையையும் தருவதில்லை மாறாக, நமது உள்ளுணர்வுகளைத் தூண்டி எழுப்புகின்றன என்றும், மோசே மற்றும் இறைவாக்கினர்கள் எடுத்துரைக்கும் கடவுளின் கட்டளைகள் மற்றும் வாக்குறுதிகளுக்கு செவிசாய்ப்பதன் வழியாக அவரது பாதுகாப்பு நம்மை விட்டு அகலாது என்பதை அறிகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததால் அனைவரின் வாழ்க்கையும் மாறக்கூடும் என்று நற்செய்தி நமக்கு அறிவிக்கிறது என்றும், நம்மைக் காப்பாற்றும் உண்மையான இந்நிகழ்வு அறியப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும், அன்பு செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

நற்செய்தியைப் புரிந்துகொள்ள நம்மை வழிநடத்துவது அன்புதான், ஏனென்றால் அன்பு கடவுளின் வார்த்தைக்கும் நம் அண்டை வீட்டாரின் முகத்திற்கும் நம் இதயங்களைத் திறப்பதன் வழியாக நம்மை மாற்றுகிறது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மறைக்கல்வியாளர்கள் ஒவ்வொருவரும் இயேசுவின் சீடர்களாக, அவரின் சான்றுகளாக மாறுகிறார்கள் என்றும் கூறினார்.

கிரேக்க வினைச்சொல்லான katēchein இலிருந்து வரும் கேட்டகிசம் என்ற சொல்லிற்கு "சத்தமாகக் கற்பித்தல், எதிரொலித்தல்" என்பது பொருள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நமது முதல் மறைக்கல்வியாளர்கள் நமது பெற்றோர்கள் என்றும் அவர்களிடமிருந்தே நாம் முதலில் பேசக் கற்றுக் கொள்கின்றோம் என்றும் கூறினார்.

நமது தாய்மொழியை நாம் நமது பெற்றோர்களிடத்தில் பேசிக் கற்றுக்கொண்டது போல, நம்பிக்கை அறிக்கையை நாம் கற்றுக்கொள்கிறோம் என்றும், கிறிஸ்துவை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்லும் செயல்கள் குடும்பங்களில் இருக்கும்போது அக்குடும்பம் நற்செய்தியின் அழகை அனுபவிக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 செப்டம்பர் 2025, 14:38