நீதித்துறையினருக்கான யூபிலியின் பங்கேற்பாளர்களுக்கு திருத்தந்தையின் உரை

நீதி இல்லாத ஓர் அரசு, உண்மையான ஓர் அரசு அல்ல, உண்மையில், நீதி என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமையைப் பகிர்ந்து கொடுக்கும் நல்லொழுக்கம் ஆகும் - திருத்தந்தை.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உலகின் பல நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மிகவும் அநீதியான நிலைகளில் மனிதாபிமானமற்ற சூழலில் இருக்கின்றன என்றும், ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு "நீதிக்காகப் பசி தாகம்" கொண்டிருப்பவர்கள் அவர்கள் என்னும் எதார்த்தத்தை நீதித்துறையினருக்கான யூபிலியானது, நமக்கு வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 20, சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நீதித்துறை ஊழியர்களுக்கான யூபிலி விழாவின் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

"நீதி இல்லாமல், அரசை நிர்வகிக்க முடியாது; உண்மையான நீதி இல்லாத நிலையில் உரிமைகளைப் பெறுவது சாத்தியமில்லை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், சட்டத்தின்படி செய்யப்படும் ஒரு செயல் நிச்சயமாக நீதியின்படி செய்யப்படுகிறது, நீதிக்கு எதிராக செய்யப்படும் ஒரு செயலை சட்டத்தின்படி செய்வது சாத்தியமில்லை என்றும் எடுத்துரைத்தார்.

நீதி இல்லாத ஓர் அரசு, உண்மையான ஓர் அரசு அல்ல என்றும், உண்மையில், நீதி என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமையைப் பகிர்ந்து கொடுக்கும் நல்லொழுக்கம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

மனிதனை உண்மையான கடவுளிடமிருந்து நீக்குவது மனித நீதி அல்ல என்ற புனித அகுஸ்தினாரின் கருத்துக்களை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள், சவாலான வார்த்தைகள், நீதி, சட்டம் மற்றும் மனிதர்களின் மாண்பை முழுமையாக மதிக்கும் வகையில், கடவுளை நோக்கி நம் பார்வையைத் திருப்பி, மக்களின் சேவையில் நீதியைப் பயன்படுத்துவதை எப்போதும் வெளிப்படுத்த நம் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கட்டும் என்றும் கூறினார்.

நீதி மற்றும் அதன் செயல்பாடுகள், சமூகத்தின் ஒழுங்கான வளர்ச்சிக்கும், ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் மனச்சான்றை ஊக்குவிக்கின்ற மற்றும் வழிநடத்துகின்ற ஓர் முக்கிய நற்பண்பாகவும் அமைகின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நீதித்துறையின் பரந்த துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றுபவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

 நீதி என்பது மனித சகவாழ்வில் ஓர் உயர்ந்த செயல்பாட்டைச் செய்ய அழைக்கப்படுகிறது, இது சட்டத்தின் பயன்பாடு அல்லது நீதிபதிகளின் பணிக்கு மட்டும் குறைக்கப்பட முடியாது, அல்லது அதை நடைமுறை அம்சங்களுக்கு குறைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

ஒவ்வொரு நபரின் உரிமைகளையும் மதிக்கவும், மனித உறவுகளில் மக்கள் மற்றும் பொது நன்மைக்கு சமத்துவத்தை ஊக்குவிக்கும் நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் நீதி நம்மை வழிநடத்துகிறது என்றும், ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள், விலக்கப்பட்டவர்கள் அல்லது புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆகிய நீதியைத் தேடுபவர்களாம் பலவீனமானவர்களைப் பாதுகாக்கும் ஓர் ஒழுங்கை உத்தரவாதம் செய்கிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 செப்டம்பர் 2025, 14:08