இந்தோனேசியா கத்தோலிக்க சமூகத்தை சார்ந்த மக்களுடன் திருத்தந்தை இந்தோனேசியா கத்தோலிக்க சமூகத்தை சார்ந்த மக்களுடன் திருத்தந்தை   (ANSA)

இணைப்பின் பாலங்களைக் கட்டுபவர்களாகத் தொடர்ந்து இருப்போம்

உரையாடல் மற்றும் நட்புறவின் பாதை சவாலானதாக இருக்கலாம், ஆனால் அது அமைதியின் விலைமதிப்பற்ற பலனைத் தருகிறது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உண்மையுள்ள கத்தோலிக்கர்களாகவும் பெருமைமிக்க இந்தோனேசியர்களாகவும், நற்செய்திக்கு அர்ப்பணிப்புடன், சமூகத்தில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும் முடியும் என்பதை உரோமில் வாழும் இந்தோனேசிய மக்கள் தங்கள் வாழ்வால் வெளிப்படுத்துகின்றனர் என்றும், மக்கள், கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு இடையே இணைப்பின் பாலங்களைக் கட்டுபவர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 22, திங்களன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் உரோமில் உள்ள இந்தோனேசியா கத்தோலிக்க சமூகத்தை சார்ந்த மக்கள் ஏறக்குறைய 200 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் இந்தோனேசியாவிற்கு வருகை தந்தை முதல் ஆண்டின் நிறைவு மற்றும் இந்தோனேசியா மற்றும் திருஅவை இரண்டிற்கும் இடையிலான 75 ஆண்டுகால உறவிற்காக அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

உரையாடல் மற்றும் நட்புறவின் பாதை சவாலானதாக இருக்கலாம், ஆனால் அது அமைதியின் விலைமதிப்பற்ற பலனைத் தருகிறது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அமைதி மற்றும் ஒற்றுமையின் அடித்தளமான "சந்திப்பு கலாச்சாரத்தின்" தெளிவான எடுத்துக்காட்டுகளாகவும், பிளவுபடுத்தவும் தூண்டவும் முயலும் உலகில் ஒற்றுமையின் இறைவாக்கினர்களாகவும் இருக்க வலியுறுத்தினார்.

சொந்த நாட்டைவிட்டு வெகு தொலைவில் இருந்தாலும், துடிப்பான மரபுகளைப் பாதுகாப்பதிலும், ஒருவருக்கொருவர் அக்கறை கொள்வதிலும் சிறந்து விளங்கும் இந்தோனேசிய மக்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்களல்லாத அண்டை நாடுகளுடன் பராமரிக்கும் வலுவான உறவுகளுக்கு தனது நன்றியினையும் எடுத்துரைத்தார்.

மக்களின் இத்தகைய அமைதியான பணிச் செயல்கள் இந்தோனேசியாவின் குறிக்கோளான "பன்முகத்தன்மையில் ஒற்றுமை" என்பதை பிரதிபலிக்கின்றன என்றும், ஜகார்த்தாவில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியது போல், இந்தோனேசிய மக்கள் பொது நன்மையைப் பின்தொடர்வதன் வழியாகப் பிணைக்கப்படும்போது ஒரு "ஒற்றுமைப்படுத்தும் துணியை" உருவாக்குகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

பன்முகத்தன்மைக்கு மத்தியில் நல்லிணக்கத்தைப் பேணுவது என்பது ஒரு நுட்பமான "அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்ட கைவினைத்திறன் வேலை" போன்றது என்றும், புதிய புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில் இருந்து உள்ளூர் சமூகங்களுடன் உங்கள் கலாச்சாரத்தைப் பகிர்ந்து கொள்வது வரை இந்த ஒற்றுமையை நீங்கள் கடைப்பிடிக்கும் விதங்களால் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 செப்டம்பர் 2025, 13:39