புனித அன்னா ஆலயத்தில் திருத்தந்தை புனித அன்னா ஆலயத்தில் திருத்தந்தை   (ANSA)

செல்வத்தை பொது நன்மையாக மாற்றும் நீதியை நாடுபவர்கள்

இயேசுவே உலக மீட்பர், எல்லா தீமைகளிலிருந்தும் நம்மை விடுவிப்பவர் என்பதை நம் வார்த்தைகளாலும் செயல்களாலும் அறிவிப்போம் - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

செல்வத்திற்குப் பணியாற்றுபவர்கள், அதற்கு அடிமைகளாகவே இருக்கிறார்கள் என்றும், நீதியை நாடுபவர்கள் செல்வத்தை பொது நன்மையாக மாற்றுகிறார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 21, ஞாயிறன்று உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் வத்திக்கானில் உள்ள புனித அன்னா ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்ததை பதினான்காம் லியோ.

ஆதிக்கத்தை நாடுபவர்கள் பொது நன்மையை தங்கள் சொந்த பேராசையின் இரையாக மாற்றுகிறார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நம் இதயங்களை குழப்பி, நம் எதிர்காலத்தை சிதைக்கும் பொருள் மீதான இந்த பற்றுதலை திருவிவிலியம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றும் கூறினார்.

வத்திக்கானில் நுழைவாயில் அருகில் இருக்கும் இந்த புனித அன்னா ஆலயமானது மிக முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது என்றும், ஏராளமான மக்கள் வத்திக்கான் நகரத்திற்குள் நுழைந்து வெளியேறும்போது இந்த புனித அன்னா ஆலயத்தைக் கடந்து செல்கின்றனர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

பணிக்காக, பார்வையாளர்களாக, திருப்பயணிகளாக என பலர் விரைவாகவும் பக்தியாகவும் இந்த ஆலயத்தைக் கடந்து செல்கின்றனர் என்றும், செபம், ஒப்புரவு, பிறரன்புப் பணிகள் என அனைத்திற்கும் திறந்த கதவுகளும் இதயங்களும் கொண்டு இவ்வாலயம் இயங்கி வருகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

செல்வம்தான் நம் உயிரைக் காப்பாற்றும் என்று நாம் நம்பும்போது, ​​செல்வத்திற்கான தாகம் நம் இதயங்களில் நுழைந்து கடவுளின் இடத்தைப் பிடிக்கும் அபாயம் உள்ளது என்றும், கடவுள் இல்லாமல் நாம் இன்னும் நன்றாக வாழ முடியும், அதே நேரத்தில் செல்வம் இல்லாமல் ஆயிரம் தேவைகளால் நாம் சோகமாகவும் துன்பமாகவும் இருப்போம் என்று நினைப்பது சோதனை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

திருஅவையின் சமூகத்தை உயிருடன் வைத்திருப்பதில் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு தருவதற்கும், தாராளமான திருத்தூதுப் பணியைச் செய்து வருவதற்கும் புனித அன்னா ஆலயத்தைச் சார்ந்தவர்களுக்கு நன்றி கூறிய திருத்தந்தை அவர்கள், போரினால் கடுமையாக அச்சுறுத்தப்படும் இக்காலத்தில் நம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் இருக்க அனைவருக்கும் ஊக்கமூட்டினார்.

வன்முறையால் நசுக்கப்பட்டுள்ள உலக மக்கள் அனைவரும் துயரத்தின் விதிக்குக் கைவிடும் அலட்சியத்தால் இன்னும் அதிகமாக நசுக்கப்பட்டுள்ளனர் என்றும்,  இந்த துயரங்களை எதிர்கொள்ளும்  ​​நாம் அதற்கு அடிபணிய விரும்பாமல், இயேசுவே உலக மீட்பர், எல்லா தீமைகளிலிருந்தும் நம்மை விடுவிப்பவர் என்பதை நம் வார்த்தைகளாலும் செயல்களாலும் அறிவிப்போம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

திருஅவையின்  மிக உயர்ந்த புதையல் போன்ற திருநற்கருணையால் வளர்க்கப்பட்டு, இரக்கம் மற்றும் அமைதியின் சாட்சிகளாக மாற, அவருடைய ஆவி நம் இதயங்களை மாற்றட்டும் என்று கூறி தனது மறையுரையினை நிறைவு செய்தார் திருத்தந்தை. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 செப்டம்பர் 2025, 13:46