மக்கள் மத்தியில் திருத்தந்தை மக்கள் மத்தியில் திருத்தந்தை   (ANSA)

மறைப்பணிகளைத் துணிவுடன் ஆற்றியவர் அருளாளர் பீட்டர் பால் ஓரோஸ்

உக்ரைன் நாட்டின் அமைதிக்காக கடவுளின் அருளைப் பெற, புதிய அருளாளரின் பரிந்துரையை நாடி செபிப்போம் - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

இன்று திருஅவையின் புதிய அருளாளராக உயர்த்தப்பட்டுள்ள உக்ரைனின் பில்கியைச் சார்ந்த அருள்பணியாளர் பீட்டர் பால் ஓரோஸ் அவர்கள் கிறிஸ்தவ மறைப்பணிகளைத் துணிவுடன் ஆற்றியவர் என்றும், துயரங்கள், ஆபத்துக்கள் பல இருந்தபோதிலும் அவற்றை எதிர்கொண்டு இறைப்பணியினை நன்கு  ஆற்றியவர் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 27, சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மறைக்கல்வியாளர்களுக்கு வழங்கிய யூபிலி மறைக்கல்வி உரையினைத் தொடர்ந்து எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பில்கியில் (உக்ரைன்), 1953 ஆம் ஆண்டு கிறிஸ்தவ நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்ட முகச்சேவோ மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர், பீட்டர் பால் ஓரோஸ் அவர்கள், கிரேக்க கத்தோலிக்க திருஅவை தடைசெய்யப்பட்டபோதும் கூட திருத்தூதர் பேதுருவின் வழி நின்று உண்மையாக வாழ்ந்தார் என்றும், ஆபத்துகளை உணர்ந்து, துணிவுடன் தனது பணியினை மேற்கொண்டார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

போரின் துயரம் இருந்தபோதிலும், அன்பான உக்ரேனிய மக்கள் நம்பிக்கையிலும், எதிர்நோக்கிலும் மன உறுதியுடன் நிலைத்திருக்க புதிய அருளாளரிடம் செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நாட்டின் அமைதிக்காக கடவுளின் அருளைப் பெற, புதிய அருளாளரின் பரிந்துரையை நாடி செபிப்போம் என்றும் கூறினார்.

இத்தாலிய மொழிபேசும் குழுக்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், கடவுளின் வார்த்தையைக் கேட்பதிலும் தனிப்பட்ட மற்றும் குழு செபத்தில் வேரூன்ற முயற்சி செய்யுங்கள் என்றும், இதன் வழியாக, ஆன்மிகத்தின் அடிப்படையில் மிகவும் கூர்மையான கிறிஸ்தவ சான்றுவாழ்வை நோக்கி தீவிரமாக நடப்பதற்கான ஆற்றலையும் ஒளியையும் காண்பீர்கள் என்றும் கூறினார்.

இறைத்தந்தையிடம் நம்மை வழிநடத்தும் தூய்மையான வாசலான கிறிஸ்து எப்போதும் நம் வாழ்க்கையின் மையத்தில் இருக்கட்டும் என்றும், இதனால் நாம் அவருடைய அன்பின் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியான சான்றுகளாக இருக்க முடியும் என்றும் வாழ்த்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 செப்டம்பர் 2025, 14:17