அருள்சகோதரிகளுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ அருள்சகோதரிகளுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ   (ANSA)

நமது பணிகள் கடவுளின் கரங்களில் உள்ளன

கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்னும் வார்த்தைப்பாடுகளின் வழியாக துறவற வாழ்வைத் தேர்ந்த அருள்சகோதரிகள், கிறிஸ்துவைப் பின்பற்றவும், வாழ்வின் கடைசி நிலை வரை இறைப்பணியாற்றி, தங்கள் உயிரைத் தியாகம் செய்து மறைசாட்சிகளாக மாற்றும் நிலைக்குத் தங்களையேக் கையளித்தனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பணியாற்றுவதற்கான ஆற்றல் கடவுளிடமிருந்து வரும் போது அனைத்தும் சாத்தியம் என்றும், நமது பணிகள் கடவுளின் கரங்களில் உள்ளன, ‘நாம் பயனற்ற பணியாளர்கள்; நம் கடமையைத்தான் செய்தோம்’ என்று வலியுறுத்தும் நற்செய்தியின் வரிகளுக்கேற்ப நாம் வாழவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 22, திங்களன்று வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில், புனித பவுல் சாட்ரஸ் சபை (79), சலேசிய சபை (25), புனித கேத்தரின் சபை (45), புனித பூமியின் கார்மலேட் சபை (25) அருள்சகோதரிகள் ஏறக்குறைய 175 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.   

கடவுள் பல வலிமையான மற்றும் துணிவான பெண்களைக் கண்டார், அவர்கள் அவரது திட்டங்களை ஏற்றுக்கொண்டு அவரது அழைப்புக்கு "ஆம்" என்று பதிலளிக்கவும், ஆபத்துக்கள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் தயங்கவில்லை என்றும் கூறினார் திருத்தந்தை.

கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்னும் வார்த்தைப்பாடுகளின் வழியாக துறவற வாழ்வைத் தேர்ந்துள்ள அருள்சகோதரிகள், கிறிஸ்துவைப் பின்பற்றவும், வாழ்வின் கடைசி நிலை வரை இறைப்பணியாற்றி, தங்கள் உயிரைத் தியாகம் செய்து மறைசாட்சிகளாக மாற்றும் நிலைக்குத் தங்களையேக் கையளித்தனர் என்றும்  எடுத்துரைத்தார் திருத்தந்தை.

கடினமான காலங்களில் மறைப்பணியில் ஈடுபட்ட அசாதாரண பெண்களாகிய அருள்சகோதரிகள், சமூகத்தின் மிகவும் கைவிடப்பட்ட பகுதிகளில் அடிப்படை மற்றும் பொருளாதாரத் துயரங்களில் தங்களை தாழ்த்தியவர்கள் என்றும், உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுடன் நெருக்கமாக இருப்பதற்காக, போர்க்காலத்தில் கொடூரமான வன்முறையால் பாதிக்கப்பட்டு, தங்கள் உயிரைப் பணயம் வைக்க ஒப்புக்கொண்டவர்கள் அவர்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

செபவழிபாடுகள், திருப்புகழ்மாலை, பாடல்கள் போன்றவற்றின் வழியாக தங்களது வாழ்வை மேம்படுத்திக்கொண்டவர்கள் அவர்கள் என்றும், செபத்தாலும் நோன்பாலும் தங்களது உடலைக் கட்டுப்படுத்தினர், செபத்தின் இனிமையான உணர்வால் மனதை வளர்த்தனர், விண்ணக மகிழ்ச்சியால் தங்கள் ஆன்ம தாகத்தைத் தணித்தனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஞானமான மற்றும் ஆழமான வார்த்தைகளான இவை அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையின் அடிப்படை வேர்களை, காட்சி தியானம் மற்றும் மறைப்பணி அர்ப்பணிப்பில் நினைவுபடுத்துகின்றன என்றும், இவை இரண்டு நிலைகளிலும் நம்பிக்கையின் ஆற்றல், ஒரே மூலமான கிறிஸ்துவிடமிருந்து வருகிறது என்றும் எடுத்துரைத்தார்.

கடவுளுடன் நெருக்கமாக ஒன்றிணைந்த மக்கள், அவரது பணிக்கும் முழு திருஅவையின் நன்மைக்கும் அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என்றும், தங்கள் சகோதர சகோதரிகளின் இதயங்களில் வேரூன்றி ஒருங்கிணைக்கவும், முதலில் தங்களுக்குள் உயிருடன் இருப்பதாக உணர்ந்த கிறிஸ்துவின் அரசை பூமி முழுவதும் பரப்பவும் உறுதிபூண்டுள்ளனர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 செப்டம்பர் 2025, 13:41