கர்தினால் Lucian Mureșan மறைவிற்கு திருத்தந்தை இரங்கல் செய்தி
மெரினா ராஜ் – வத்திக்கான்
கர்தினால் Lucian Mureșan அவர்களின் பொறுமை, நற்செய்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவரது குருத்துவ வாழ்வு போன்றவை, கிறிஸ்து மற்றும் திருஅவையின் மீது ஓர் அசைக்க முடியாத அன்பை வெளிப்படுத்தியது என்றும், உண்மையுள்ள தலைமுறைகளை ஒளிரச் செய்தது என்றும் இரங்கல் தந்திச்செய்தி ஒன்றில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 27, சனிக்கிழமை உரோமானியக் கிரேக்கக் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தின் பேராயர் CRISTIAN DUMITRU CRIŞAN, அவர்களுக்கு கர்தினால் Lucian Mureșan அவர்களின் மறைவிற்காக இரங்கல் தெரிவித்து அனுப்பியுள்ள தந்திச்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 25, வியாழனன்று மறைந்த கர்தினால் Lucian Mureșan அவர்கள், கிரேக்க கத்தோலிக்க திருஅவையின் அருள்பணியாளர்கள் மற்றும் மக்களுக்கு பேரன்பு காட்டும் தந்தையாகவும், வழிகாட்டியாகவும் இருந்தார் என்றும், அவரது மறைவினால் வருந்தும் அனைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக இரங்கல் தந்திச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
திருஅவை துன்புறுத்தப்பட்ட காலங்களிலும் கூட உண்மையுள்ள திருஅவையின் மகனாக சான்றுள்ள வாழ்க்கை வாழ்ந்தவர் கர்தினால் Lucian Mureșan அவர்கள் என்றும், அவரது முன்மாதிரிகையான சான்று வாழ்விற்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
பல ஆண்டு சோதனைக் காலங்களில் அவர் துணிவுடன் தாங்கிய சிரமங்களையும் அவமானங்களையும் போற்றி நினைவுகூர்வதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தனது சுதந்திர மனநிலையைப் பணயம் வைத்து மேய்ப்புப்பணியில் கிறிஸ்துவுக்கு பணியாற்றினார் என்றும், பொறுமை மற்றும் நற்செய்தி அர்ப்பணிப்பால் வகைப்படுத்தப்பட்ட அவரது குருத்துவ வாழ்வு, கிறிஸ்து மற்றும் திருஅவையின் மீது ஒரு அசைக்க முடியாத அன்பை வெளிப்படுத்தியது, உண்மையுள்ள தலைமுறைகளை ஒளிரச் செய்தது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
கர்தினால் Lucian Mureșan அவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற செபிப்பதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், தனது கொள்கைக்கு உண்மையுள்ளவராகவும், விண்ணகத் தந்தையிடம் நம்பிக்கையுடன் தன்னைத்தானே கையளித்து, துன்பத்திலும் துணிவுடன் வாழ்ந்து தனது உயிரை இறைக்கரங்களில் ஒப்படைத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
