செபமாலை செபிக்கும் கரங்கள் செபமாலை செபிக்கும் கரங்கள்   (ANSA)

அமைதிக்காக அக்டோபர் மாதத்தில் செபமாலை செபிப்போம்

அக்டோபர் 11, சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சிறப்பிக்கப்படும், மரியன்னை ஆன்மீகத்தாருக்கான யூபிலி நாளின் போது, இரண்டாவது வத்திக்கான் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு நிறைவையும் நினைவுகூரும் வகையில், ஒன்றிணைந்து செபமாலை செபிப்போம் - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

அன்புள்ள சகோதர சகோதரிகளே, அக்டோபர் மாதம் நெருங்கி வருகிறது, இது திருஅவையில் குறிப்பாக புனித செபமாலை அன்னைக்கு இந்த அக்டோபர் மாதம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது; எனவே, வரும் மாதத்தின் ஒவ்வொரு நாளும், தனிப்பட்ட முறையில், குடும்பங்களில் மற்றும் சமூகங்களில் அமைதிக்காக செபமாலை செபிக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

வத்திக்கானில் பணியாற்றுபவர்கள் ஒவ்வொரு நாளும் மாலை 7:00 மணிக்கு புனித பேதுரு பேருங்கோவிலில் செபமாலை செபிக்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், குறிப்பாக, அக்டோபர் 11, சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சிறப்பிக்கப்படும், மரியன்னை ஆன்மீகத்தாருக்கான யூபிலி நாளின் போது, ​​இரண்டாவது வத்திக்கான் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு நிறைவையும் நினைவுகூரும் வகையில், ஒன்றிணைந்து செபமாலை செபிப்போம் என்றும் வலியுறுத்தினார்.  

இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்தி வரவேற்ற திருத்தந்தை அவர்கள், இவ்வாண்டு தங்களதுச் அபையின் பொதுப்பேரவைகளை சிறப்பிக்கும் புனித பேதுரு கிளாவர் மறைப்பணி அருள்சகோதரிகள், பிரான்சிஸ்கன் சபை அருள்சகோதரிகள், இயேசு மற்றும் அன்னை மரியாவின் திரு இருதய பிரான்சிஸ்கன் சபை அருள்சகோதரிகள், கைவிடப்பட்ட முதியவர்களின் சிறிய சகோதரிகள், புனித மினியாதோ மறைமாவட்டத்தின் துறவிகள் மற்றும் நமது கடவுளாகிய இயேசு கிறிஸ்துவின் புனித காயங்களின் சபை துறவிகள் ஆகியோரை அன்புடன் வரவேற்றார்.

அனைவரும் எல்லா இடங்களிலும் மீட்பின் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு செல்ல, பேரின்ப உணர்வைப் புதுப்பிக்க ஊக்கமூட்டினார் திருத்தந்தை.

மறைக்கல்வி உரையில் பங்கேற்ற ஏராளமான தலத்திருஅவை குழுக்களைச் சார்ந்தவர்கள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள்,  இளைஞர்கள், நோயாளிகள் மற்றும் புதுமணத் தம்பதிகளுக்கு ஆகியோரை நினைவுகூர்ந்து வாழ்த்தி,  இயேசுவுடனான நட்புறவு மகிழ்ச்சியின் அடிப்படையாகவும், ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு உற்சாகமாகவும், துன்பம் மற்றும் சோதனை காலங்களில் ஆறுதலாகவும் இருக்கட்டும். என்றும் கூறி வாழ்த்தினார்.

இறுதியாக விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் இலத்தீன் மொழியில் பாடலாகப் பாடப்பட்டதைத் தொடர்ந்து கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 செப்டம்பர் 2025, 16:04