வத்திக்கான் புனித அன்னா ஆலயத்தில் திருத்தந்தையின் திருப்பலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
செப்டம்பர் 21, ஞாயிறன்று வத்திக்கானில் உள்ள புனித அன்னா ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்ற உள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
பொதுக்காலத்தின் 25-ஆம் ஞாயிறு திருப்பலியினை வருகின்ற செப்டம்பர் 21, ஞாயிறன்று உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் நிறைவேற்ற உள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
1929-ஆம் ஆண்டு முதல் புனித அகுஸ்தினார் சபையாரில் பொறுப்பில் விடப்பட்ட இவ்வாலயமானது 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று திருஅவையில் நினைவுகூரப்படும் புனித சுவக்கீன் அன்னா திருவிழாவன்று கர்தினால் ரொபர்தோ பிரவோஸ்டாக இந்த ஆலயத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருப்பலி நிறைவேற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டுமானப்பணிகள் கொண்ட பழமையான ஆலயம், இறைவனின் தாயாம் புனித கன்னி மரியாவின் தாயான புனித அன்னாவைப் பாதுகாவலராகக் கொண்டு இயங்கும் வத்திக்கானின் பங்கு ஆலயமாகும்.
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் அவர்கள் 1929ஆம் ஆண்டு மே 30 அன்று இந்த ஆலயத்தின் பொறுப்பை புனித அகுஸ்தினார் சபையாரிடம் ஒப்படைத்தார். இப்பங்கின் முதல் பங்குத்தந்தையாக இருந்தவர் அருள்பணி அகுஸ்தினோ ருயெல்லி, தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி மாரியோ மில்லார்தி.
96ஆண்டுகாலமாக இயங்கி வரும் இந்த புனித அன்னா ஆலயம் அதன் 90 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியபோது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது சிறப்பு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார். திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் அவர்களால் வத்திக்கானின் பங்கு ஆலயமாக நியமிக்கப்பட்ட இந்த ஆலயம் தற்போது ஓர் "உலகளாவிய" ஆலயமாக மாறியுள்ளது.
புனித அன்னா ஆலயத்தில் திருத்தந்தையர்கள்
1931 -ஆம் ஆண்டு பிப்ரவரி 7, அன்று ஆர்மோனியம் திறப்பு விழாவில் கலந்து கொண்டார் திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்.
1961-ஆம் ஆண்டு ஜனவரி 20, அன்று இந்த ஆலயத்தைப் பார்வையிட்டா திருத்தந்தை 23ஆம் யோவான் அருள்.
1970-ஆம் ஆண்டு மே 29, அன்று காலை 8 மணிக்கு தனது குருத்துவத்தின் 50 வது ஆண்டு நிறைவை இந்த ஆலயத்தில் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை புனித ஆறாம் பால்.
1978-ஆம் ஆண்டு டிசம்பர் 10அன்று தனது மறையுரையில் அதை "எனது பங்கு" என்று அழைத்தார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்;
2006-ஆம் ஆண்டு பிப்ரவரி 5, அன்று ஒரு திருப்பலிக்குத் தலைமை தாங்கினார் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்.
2013-ஆம் ஆண்டு மார்ச் 17, அன்று தனது முதல் பொது திருப்பலியை இந்த ஆலயத்தில் நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
