கத்தாரின் ஹமாஸில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு கத்தாரின் ஹமாஸில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு   (AFP or licensors)

மிகவும் மோசமான போர்ச்சூழலில் உலகம் உள்ளது

அமைதிக்காக கடுமையாக ஜெபியுங்கள், உழையுங்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது என்பது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கத்தாரின் ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தாக்குதல் உலகம் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளதை எடுத்துரைக்கின்றது என்றும், அமைதிக்காக நாம் கடுமையாக செபிக்க வேண்டும், தொடர்ந்து அதற்காகப் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 9, செவ்வாயன்று திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்ஃபோவிலிருந்து வத்திக்கான் இல்லம் திரும்பும் முன் செய்தியாளர்களுக்கு கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

கத்தாரின் தோஹாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சுருக்கமாக பதிலளித்த திருத்தந்தை அவர்கள், அங்கு நடக்கும் நிகழ்வுகள் உலகம் எதை நோக்கிச் செல்கின்றன என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும், அமைதிக்காக நாம் கடுமையாக ஜெபிக்க வேண்டும், அமைதியை வலியுறுத்த வேண்டும் என்றும் கூறினார்.

காசா நகரில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைக் குறித்து, அங்குள்ள தலத்திருஅவை அருள்பணியாளரைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததாக கூறிய திருத்தந்தை அவர்கள், கத்தாரின் தோஹாவில் இஸ்ரேல் குண்டுவீசியதில் தலைநகரில் உள்ள பல குடியிருப்பு கட்டிடங்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்டன என்றும் எடுத்துரைத்தார்.

அமைதிக்காக கடுமையாக ஜெபியுங்கள், உழையுங்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது என்பது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். மேலும் முழு சூழ்நிலையும் உண்மையிலேயே தீவிரமானது, என்று கூறிய திருத்தந்தை அவர்கள் காசாவிலுள்ள திருக்குடும்ப பங்குத்தளத்தின் அருள்பணியாளர் கேப்ரியல் ரோமானெல்லியைத் தொடர்பு கொண்டு சூழல் குறித்து அறிந்துகொண்டதாகவும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 செப்டம்பர் 2025, 16:33