ஆற்றல் மிக்க செயல்களைச் செய்ய துணிவுடன் இருங்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
சீடர்கள் நாள் முழுவதும் இயேசுவோடு இருந்தது போல தனிசெபம், திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் வழியாக அவரோடு எப்போதும் நெருக்கமாக இருங்கள் என்றும், அவரது உடனிருப்பை அன்றாட வாழ்வில் உணர்வதன் வழியாக, ஆற்றல் மிக்க செயல்களைச் செய்ய துணிவுடன் இருங்கள் என்றும் இயேசு சபை உயர்தலைவர்களுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
அக்டோபர் 24வெள்ளி காலை வத்திக்கானில் இயேசு சபையின் தலைவர்களுக்கான மூன்றாம் கூட்டத்தில் பங்கேற்பாளர்களைச் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
உண்மையை எடுத்துரைத்தல், ஒப்புரவு அளித்தல் குணமளித்தல் நீதிக்கான செயல்களில் ஈடுபடுதல், சிறையிலிருப்பவர்களுக்கு விடுதலை அளித்தல் போன்ற செயல்களில் துணிவுடன் ஈடுபட வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கிறிஸ்துவோடு நாம் உடன் நடந்தால் எந்த எல்லையும் நமது எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்காது என்றும் வலியுறுத்தினார்.
கலாச்சாரம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் அரசியலில் விரைவான மாற்றங்கள் நிறைந்த இக்காலத்திலும் கிறிஸ்து தொடர்ந்து தனது சீடர்களை பணிக்குத் தொடர்ந்து அனுப்புகிறார் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இயேசு சபை நீண்ட காலமாக மனிதகுலத்தின் தேவைகள் கடவுளின் மீட்பு மற்றும் அன்பைப் பூர்த்தி செய்யும் இடத்தில் இருந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
ஆன்மீக வழிகாட்டுதல், அறிவுசார் உருவாக்கம், ஏழைகளுக்கு பணியாற்றுதல், கலாச்சார எல்லைகளில் கிறிஸ்தவத்திற்கு சான்றளித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், லொயோலாவின் புனித இக்னேஷியஸும் அவரது தோழர்களும் உறுதியற்ற தன்மை அல்லது சிரமத்திற்கு அஞ்சாது, விளிம்பு நிலை மக்களிடத்திலும், நம்பிக்கையும் பகுத்தறிவும் புதிய கலாச்சாரங்கள் மற்றும் பெரிய சவால்களுடன் குறுக்கிடும் பகுதிகளுக்கும் சென்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
இன்றைய முக்கிய எல்லைகளில் ஒன்று திருஅவையில் கூட்டொருங்கியக்கப் பயணம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கூட்டொருங்கியக்கப் பயணம் நம் ஒவ்வொருவரையும் தூய ஆவியாரையும் ஒருவருக்கொருவர் இன்னும் ஆழமாக செவிசாய்க்க அழைக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.
மனித மாண்பைப் பாதுகாத்து, பொது நன்மையை மேம்படுத்துவதன் வழியாக, இந்த முன்னேற்றங்களை நெறிமுறையாக வழிநடத்த திருஅவை உதவ வேண்டும் என்றும், நற்செய்தியை அறிவிக்கவும், தலத்திருஅவைகளை உருவாக்கவும், நுகர்வோர், அதிகாரம் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றை சவால் செய்ய மின்னனு தளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நாம் பகுத்தறிந்து கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
ஆன்மீக பயிற்சிகள் மற்றும் பகுத்தறிவு, ஏழைகள், உலகில் ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் மாண்பிழந்தவர்களுடன் பயணித்தல், நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி இளைஞர்களுடன் பயணித்தல், நமது பொதுவான இல்லத்தைப் பராமரித்தல், போன்ற இயேசு சபையாரின் பணிகள் மற்றும் விருப்பங்களை எடுத்துரைத்து அவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இப்பணிகள் மனித மற்றும் இறைத்தன்மை கொண்ட கூக்குரலுக்கு பதிலளிக்கிறது என்றும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, எளிமை மற்றும் கடவுளின் கொடைக்கான நன்றியுணர்வின் எடுத்துக்காட்டுகளாக வாழும் சமூகங்கள் இருக்கட்டும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
