திருத்தந்தையர்களுக்கு ஒத்துழைப்பு நல்கியவர் கர்தினால் இரஃபேல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
உரையாடலுக்கான சிறந்த அரசுத்தூதுவராகவும், ஆழ்ந்த நன்றியுணர்வு உடையவராகவும் குடும்பம் மட்டுமல்லாது திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றல்களாக, திருஅவையை வழிநடத்திய திருத்தந்தையர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கி வாழ்ந்தவர் மறைந்த கர்தினால் இரஃபேல் மேரி தெல் வால் என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இறைஊழியரான கர்தினால் இரஃபேல் மேரி தெல் வால் அவர்களின் 160-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது குடும்பத்தார் மற்றும் அவரைப்பற்றிய கல்வி பயில்வோர் என ஏறக்குறைய 250 பேரை வத்திக்கானின் கிளமென்தினா அறையில் அக்டோபர் 13, திங்களன்று சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
1865 ஆம் ஆண்டு இலண்டனில் இஸ்பானிய தந்தை மற்றும் ஆங்கிலேய தாயாருக்கு மகனாகப் பிறந்து, வேறுபட்ட மொழி மற்றும் கலாச்சாரத்தில் வாழ்ந்தவர் என்றும், உலகளாவிய தன்மையை இளம்வயது முதலே சுவாசித்து, குருத்துவ அழைப்பை ஏற்று திருஅவையின் அரசுசார் பணியில் மிக முக்கியமான இடத்தினை வகித்து சிறப்பாகப் பணியாற்றியவர் கர்தினால் இரஃபேல் என்றும் கூறினார் திருத்தந்தை.
மிக இளம் வயதிலேயே, நுட்பமான விஷயங்களைக் கையாள திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அவர்களுக்கு உதவி செய்து கற்றுக்கொண்டார் என்றும், கனடாவின் அப்போஸ்தலிக்க பிரதிநிதியாக பணியாற்று திருஅவையின் ஒன்றிப்பு மற்றும் கத்தோலிக்க கல்விக்காக தனது நேரத்தை வழங்கினார் என்றும் கூறினார் திருத்தந்தை.
நிசேயாவின் பேராயராக தனது 35-ஆம் வயதில் நியமிக்கப்பட்ட கர்தினால் அவர்கள், 1903ஆம் ஆண்டு தனது 38ஆவது வயதில் திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் அவர்களால் கர்தினாலாக நியமிக்கப்பட்டார் என்றும், திருஅவையின் வரலாறானது உண்மையான முதிர்ச்சி என்பது ஆண்டுகளைச் சார்ந்தது அல்ல மாறாக கிறிஸ்துவின் முழுமையின் அளவோடு அடையாளம் காண்பதைப்பொறுத்தது என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் மாநிலச் செயலராக கர்தினால் பொறுப்பேற்றார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
விருதுவாக்கு மற்றும் புனிதத்துவ வாழ்க்கை
ஆள்களை என்னிடம் ஒப்படைத்துவிடும். ஆனால், செல்வங்களை நீரே வைத்துக் கொள்ளும்” (14:21) என்ற தொடக்கநூலின் இறைவார்த்தைகளை தனது மேய்ப்புப்பணிக்கான விருதுவாக்காக எடுத்துப் பணியாற்றிய கர்தினால் இரஃபேல் அவர்கள், தான் இறந்த பிறகு தனது கல்லறையில் பெயரோ அடைமொழியோ எதுவும் இடம்பெறக்கூடாது மாறாக, இவ்வரிகளே இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் எழுதப் பணித்தார் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
கர்தினால் அவர்கள் பணித்தபடியே அவரது கல்லறையில் எழுதப்பட்டுள்ளது என்றும், மரியாதைகள், பட்டங்கள், வாழ்க்கை வரலாறு என எதையும் விரும்பாத ஓர் எளிய மேய்ப்பனின் இதயத்தின் கூக்குரலாக மட்டும் அவ்வரிகள் இருக்கின்றன என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
“நான் முடிந்தவரை தூய்மைத்தனம் உள்ளவராக மாறினால், மற்றவர்கள் என்னை விட தூய்மைத்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்ற மனநிலை கொண்டு வாழ்ந்தவர் கர்தினால் இரஃபேல் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், புனிதத்துவம் என்பது ஒப்பீட்டால் அளவிடப்படுவதில்லை, மாறாக ஒன்றிப்பால் அளவிடப்படுகிறது என்றும், மற்றவர்களின் புனிதத்துவத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், கிறிஸ்துவை நோக்கி ஒன்றாக நடக்கும்போது, நம்முடைய சொந்த புனிதத்துவத்திற்காக நாம் பாடுபட வேண்டும் என்பதை நன்கு புரிந்துகொண்டவர் கர்தினால் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
