முதுபெரும்தந்தை மூன்றாம் மார் அவா அவர்களுடன் திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
உண்மையின் உரையாடல்" என்பது நமது திருஅவைகளை ஒன்றிணைக்கும் அன்பின் வெளிப்பாடு என்றும், பிறரன்புப் பணிக்கான உரையாடல் இறையியல் ரீதியாகவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
அக்டோபர் 27, திங்களன்று வத்திக்கானில் கிழக்கின் அசீரிய திருஅவையின் முதுபெரும்தந்தையான, முதுபெரும்தந்தை, மூன்றாம் மார் அவா (David Royel) அவர்களையும், அவருடன் வருகை தந்த அசீரிய சபையின் உயர் அதிகாரிகளையும் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
கத்தோலிக்க திருஅவைக்கும் கிழக்கின் அசீரிய திருஅவைக்கும் இடையிலான இறையியல் உரையாடலுக்கான ஒருங்கிணைந்த ஆணையத்தின் உறுப்பினர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், சகோதரத்துவ சந்திப்பு மற்றும் இறையியல் உரையாடல்கள், ஒற்றுமைக்கான பாதையில் நல்லிணக்கத்தின் கட்டமைப்பு கூறுகள் என்பதற்கு சான்றளிக்கின்றன என்றும் கூறினார்.
1994 ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் மற்றும் புனித நான்காம் மார் டிங்கா ஆகியோரின் கூட்டுப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடி: "முழுமையாகவும் ஒன்றித்தும் இருக்க, ஒற்றுமை என்பது நம்பிக்கையின் உள்ளடக்கம், சடங்குகள் மற்றும் திருஅவையின் அரசியலமைப்பு குறித்து ஒருமித்த கருத்தை முன்னிறுத்துகிறது" என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
நமது இறையியல் உரையாடலின் அடுத்தடுத்த கட்டங்களுக்கான கட்டமைப்பை இப்பிரகடனம் வழங்கியது என்றும், கிறிஸ்துவியல் நம்பிக்கையில் ஒருமித்த கருத்தை எட்டிய பிறகு, 1,500 ஆண்டுகள் பழமையான சர்ச்சைகளின் தீர்விக்குப் பிறகு, உரையாடல் சடங்குகளின் நல்லிணக்க அங்கீகாரத்துடன் முன்னேறியது, திருஅவைகளுக்கு இடையே புனிதத்தில் ஒரு குறிப்பிட்ட தொடர்புக்கு வழிவகுத்தது என்றும் கூறினார் திருத்தந்தை.
முழு ஒற்றுமையை நோக்கிய இந்தப் பயணத்தில், கூட்டொருங்கியக்கம் முன்னோக்கி ஒரு நம்பிக்கைக்குரிய பாதையாக தன்னை முன்வைக்கிறது என்றும், 2022 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ், கத்தோலிக்க திருஅவையின் கூட்டொருங்கியக்கம் குறித்த ஆயர் மாமன்றத்தில் கூறிய கருத்துக்களான, "கத்தோலிக்க திருஅவை பின்பற்றும் கூட்டொருங்கியக்கப் பாதை, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பாதையாகவும் இருக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நிசேயா திருச்சங்கத்தின் 1700 வது ஆண்டானது, "அனைத்து மரபுகளின் கிறிஸ்தவர்களிடையே கூட்டொருங்கியக்கத்தின் வடிவங்களை நடைமுறைப்படுத்த" நம்மை வழிநடத்தும் என்றும், புதிய "கிறிஸ்தவ சினோடல் நடைமுறைகளுக்கு" நம்மை ஊக்குவிக்கும் என்றும் தான் நம்புவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்தினை அனைவரோடும் இணைந்து செபித்து தனது கருத்துக்களை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
