வத்திக்கான் வளாகத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ வத்திக்கான் வளாகத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ  (ANSA)

இயேசுவின் சீடர்களைப் போல வாழ கற்றுக்கொள்வோம்

“நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா?”

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயேசுவின் சீடர்களைப் போலவே, நாம் ஒரு புதிய உலகில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும், வாழ்க்கையில் உள்ள அனைத்தும் சிலுவையில் அறையப்பட்டவரின் உயிர்த்தெழுதலின் வெளிச்சத்தில் காணப்பட வேண்டும் என்பதையும் எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற யூபிலி ஆண்டானது நமக்கு வலியுறுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 25, சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் யூபிலி ஆண்டிற்கான மறைக்கல்வி உரையில் பங்கேற்க வந்திருந்த ஏறக்குறைய 40,000 திருப்பயணிகளுக்கு வழங்கிய உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நம் கண்களுக்கு முன்பாக பல முரண்பாடுகளை நாம் கண்டாலும், பல எதிரெதிர்களுக்கு இடையிலான மோதலைக் கண்டாலும் அன்பு வென்றது என்பதை இயேசுவின் உயிர்ப்பு நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும், 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மன் நாட்டின் கியூஸ் பகுதியைச் சார்ந்த கர்தினால் நிக்கோலாஸ் அவர்கள், என்ன என்பதை அறியாமலும் நாம் எதிர்நோக்கி இருக்க முடியும் என்பதை இயேசு நமக்குக் கற்பிக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.

“நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில் தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா?” என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள், எதிர் எதிரெதிர் நீரோட்டங்களால் அசைந்து, கிழக்குக்கும் மேற்கிற்கும் இடையில் பிளவுபட்ட திருஅவையின் ஒற்றுமையை, கூசாவின் நிக்கோலஸால் பார்க்க முடியவில்லை என்றும் எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவம் வெளியில் இருந்து அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்த நேரத்தில், உலகிலும் மதங்களுக்கிடையேயும் அமைதியை கர்தினால் அவர்களால் பார்க்க முடியவில்லை. இருப்பினும், திருத்தந்தையின் தூதராகப் பயணம் செய்யும் போது, ​​அவர் செபித்து சிந்தித்தது அவரது எழுத்துக்கள் ஒளியால் நிறைந்துள்ளதை எடுத்துரைக்கின்றன என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

என்ன என்று அறிந்துகொள்ளாத ஒன்றே எதிர்நோக்காகின்றது. எல்லா கேள்விகளுக்கும் நம்மிடம் பதில்கள் இல்லை. ஆனால் நம்மிடம் இயேசு இருக்கிறார் என்றும்,  நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம். எனவே நாம் காணாத ஒன்றில் நம்பிக்கை வைக்கின்றோம் எதிர்நோக்குகின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

எதிரெதிராளர்களாக ஒற்றுமையுடன் ஒன்றிணைக்கப்படும் ஒரு மக்களாக மாறுகிறோம். உயிர்த்தெழுந்தவரின் புதிய உலகத்திற்குள் ஆய்வாளர்களைப் போல நுழைகிறோம் என்றும், இயேசு நமக்கு முன்னால் செல்கிறார். நாம் செல்லும்போது, ​​ஒவ்வொரு படியாகக் கற்றுக்கொள்கிறோம். இது திருஅவையின் பயணம் மட்டுமல்ல, முழு மனிதகுலத்தின் பயணம். நம்பிக்கையின் பயணம் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 அக்டோபர் 2025, 18:16