பேராயர் இஞ்ஞாசியோ மலோயன் பேராயர் இஞ்ஞாசியோ மலோயன்  

புனித இஞ்ஞாசியோ மலோயன் (1869-1915)

எனக்காக இறந்தவரின் அன்பிற்காக நான் துன்புறுத்தப்பட்டால், மகிழ்ச்சியையும் பேரின்பத்தையும் பெறுபவர்களில் நானும் ஒருவராக இருப்பேன், என் ஆண்டவரையும் என் கடவுளையும் நான் உன்னதத்தில் காண்பேன் என்பதை நான் நன்கு அறிவேன்." புனித இஞ்ஞாசியோ மலோயன்

மெரினா ராஜ் - வத்திக்கான்

தனது சொந்த ஊரான மார்டினில், துருக்கியாவின் ஆர்மீனிய கத்தோலிக்க பேராயரான இக்னாசியோ மாலோயன் அவர்கள், கிறிஸ்துவின் மீதுள்ள அன்பினால் 1915-ஆம் ஆண்டு ஜூன் 11, அன்று தனது இரத்தத்தை சிந்தி மறைசாட்சியாக உயிர்துறந்தார். அவர் 1869-ஆம் ஆண்டு ஏப்ரல் 15, அன்று பிறந்தார். லெபனானில் உள்ள சூமர் குருமடத்திற்கு குருத்துவப் படிப்பிற்காக அனுப்பப்பட்ட அவர் 1896-ஆம் ஆண்டு கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவின்போது அருள்பணியாளராக நியமிக்கப்பட்டார். எகிப்தில் ஆரம்பகால குருத்துவ பணியாற்றிய பின்னர், மார்டினின் பேராயராக, 1911-ஆம் ஆண்டு அக்டோபர் 22, அன்று நியமிக்கப்பட்டார். அவர் தனது அருள்பணியாளர்களின் ஆன்மீக மற்றும் உருவாக்கத்தை மேற்பார்வையிட்டார், தனது மேற்பார்வையின் கீழ் இருக்கும் மக்களை சந்திக்க நேரத்தை அர்ப்பணித்தார். பள்ளிகளை மீண்டும் திறந்தார் மற்றும் ஆலயங்களை மீட்டெடுத்தார்.

1915, ஜூன் 3 அன்று, பேராயர் நூற்றுக்கணக்கானவர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டார். ஆயுதங்களை மறைத்து வைத்ததாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு அதனடிப்படையில் துன்புறுத்தப்பட்டார். விடுவிக்கப்பட வேண்டுமென்றால் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறுமாறு அவர்கள் வெளிப்படையாகக் கேட்டபோதும் கூட, ​​பேராயர் மாலோயன் மறுத்துவிட்டார். தன்னோடிருந்த மக்களையும் பிற மக்களையும் வாழ்த்தி, கிறிஸ்துவுக்காக தங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்குமாறு அவர் அவர்களை ஊக்கமூட்டினார். மேலும், தனக்குக் கிடைத்த சில ரொட்டிகளை எடுத்து, அதைப் புனிதப்படுத்தி, அனைவருக்கும் இறுதி உணவாகப் பகிர்ந்தளித்தார்.

"என் நம்பிக்கைக்காக என் இரத்தம் சிந்தப்படுவதை இதயத்தின் இனிமையான விருப்பமாகக் கருதுகிறேன், ஏனென்றால் எனக்காக இறந்தவரின் அன்பிற்காக நான் துன்புறுத்தப்பட்டால், மகிழ்ச்சியையும் பேரின்பத்தையும் பெறுபவர்களில் நானும் ஒருவராக இருப்பேன், என் ஆண்டவரையும் என் கடவுளையும் நான் உன்னதத்தில் காண்பேன் என்பதை நான் நன்கு அறிவேன்." என்று இறுதியாக உச்சரித்தார். இயேசுவின் திருஇருதயப் பெருவிழாவன்று அவர் மறைசாட்சியாக இறந்தார். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் இவரை 2001ஆம் ஆண்டு அக்டோபர் 7, அன்று அருளாளராக உயர்த்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 அக்டோபர் 2025, 15:13